2011-10-06 14:33:01

அனைத்து குடிமக்களும் மதிப்புடனும் உரிமைகளுடனும் வாழ்வதே எந்த ஒரு நாட்டுக்கும் அழகு - பொலிவியா நாட்டு கர்தினால்


அக்.06,2011. நீதி அமைதி ஆகிய வழிகளில் நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களும் மதிப்புடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதே எந்த ஒரு நாட்டுக்கும் அழகு என்று பொலிவியா நாட்டின் கர்தினால் Julio Terrazas கூறினார்.
பாதுகாக்கப்பட்டப் பகுதி என்று பல ஆண்டுகளாக அரசால் குறித்து விடப்பட்டுள்ள தங்கள் காட்டுப்பகுதிகளின் வழியே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து, பொலிவியாவில் வாழும் பழங்குடியினர் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, அவர்களில் பலர் நீண்ட நடைபயணத்தை அன்று ஆரம்பித்தனர்.
இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டவர்களை Santa Cruz பேராலயத்திற்கு முன் அண்மையில் சந்தித்த அவ்வுயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Terrazas, அம்மக்களின் முயற்சிகளுக்கு தன் ஆசீரையும் செபங்களையும் வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
1500க்கும் அதிகமான பழங்குடியினர் கலந்து கொள்ளும் இந்த நடைபயணத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். இவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே, செப்டம்பர் 25ம் தேதி ஏற்பட்ட மோதலில் கண்ணீர்புகை பயன்படுத்தப்பட்டது. காவல்துறையினரின் அத்துமீறிய இந்நடவடிக்கைக்கு பொலிவிய அரசுத் தலைவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
கர்தினால் வழங்கிய ஆசீரைப் பெற்ற போராட்டக் குழுவினர் இச்செவ்வாயன்று தங்கள் நடைபயணத்தை அந்நாட்டின் தலை நகரை நோக்கித் தொடர்ந்தனர்.








All the contents on this site are copyrighted ©.