2011-10-04 14:55:43

பாகிஸ்தானில் மறைபரப்புப் பணி ஆண்டு துவக்க விழாத் திருப்பலியில் திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Pena Perra


அக்.04,2011. நற்செய்தியைப் போதிப்பதை விட, சமூக நலப் பணிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறோம்; எனவே, திருச்சபை நம்மிடம் எதிர்பார்ப்பதை நாம் மீண்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
Duc In Altum அதாவது, 'இன்னும் ஆழத்திற்குச் சென்று வலைவீசுங்கள்' என்ற கருத்துடன் மறைபரப்புப் பணி ஆண்டை பாகிஸ்தானில் அண்மையில் துவக்கியபோது, துவக்க விழாத் திருப்பலியில் உரையாற்றிய கராச்சி உயர்மறைமாவட்ட பேராயர் Evarist Pinto இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தான் நாட்டிற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Pena Perra தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில், பேராயர் Perra திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.
பாகிஸ்தானில் தற்போது நிலவும் சவால் நிறைந்த சூழலில் அங்கு கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்வது மிகவும் கடினம் என்பதையும், அப்படி சாட்சிகளாய் வாழும் கிறிஸ்துவர்களை எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், கிறிஸ்துவை மிக இரகசியமாகப் பேச வைக்கும் இந்தச் சூழலிலும் பாகிஸ்தானில் வாழும் விசுவாசிகள் கிறிஸ்துவையும், நற்செய்தியையும் மக்களுக்கு எடுத்துக் கூறும் அர்ப்பணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஸ்லாமியக் கொள்கைகளும், இஸ்லாமியச் செய்திகளும் மட்டுமே பெருமளவில் இடம்பெறும் பாகிஸ்தானில் தங்கள் குரலை எழுப்பி கிறிஸ்துவை எடுத்துச் சொல்ல, கிறிஸ்தவர்கள் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று பாப்பிறையின் மறைபரப்புக் கழகத்தின் தேசிய இயக்குனர் அருள்தந்தை மாரியோ ரொட்ரிகுவெஸ் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.