2011-10-04 14:56:52

அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் சுற்றுச்சூழலுக்கு விளையும் ஆபத்துக்கள் பற்றி ஐ.நா.அவை எச்சரிக்கை


அக்.04,2011. சுற்றுச்சூழல் மாற்றங்களால் நகரங்களில் உருவாகும் பிரச்சனைகளை உலகச்சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் திங்கட்கிழமைகளில் World Habitat Day அதாவது, உலக தங்குமிட நாள் கடைபிக்கப்படுகின்றது. அக்டோபர் 3 இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட உலகத் தங்குமிட நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பெருமளவில் அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் சுற்றுச்சூழலுக்கு விளையும் ஆபத்துக்கள் பற்றி மனித குலம் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
உலகெங்கும் உள்ள பல நகரங்களில் 6 கோடி மக்கள் கடலுக்கு மிக அருகில், அதாவது, கடலில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன், சுற்றுச் சூழல் மாற்றங்களால் கடல் நீரின் மட்டம் உயர்ந்து வருவதையும் எடுத்துக் கூறினார்.
பல்வேறு நாடுகளில் சிறு ஊர்களில் காற்று, சூரியன் ஆகிய சக்திகளைப் பயன்படுத்தும் பல முயற்சிகள் உருவாகியிருப்பது நல்லதொரு போக்கு என்பதை எடுத்துரைத்த பான் கி மூன், இந்த முயற்சிகளுக்கு அரசுகளின் ஆதரவும், உலக சமுதாயத்தின் ஆதரவும் வெகுமளவில் தரப்பட வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.