2011-10-03 15:33:53

வாரம் ஓர் அலசல் - மாற்றிச் சிந்திப்பதில் வெற்றி


அக்.03,2011. மியான்மார் இராணுவ ஆதரவு பெற்ற அந்நாட்டு அரசுத் தலைவர் தெய்ன் செய்ன்(Thein Sein), இந்த அக்டோபர் முதல் தேதி வெளியிட்ட ஒரு தீர்மானம் பலரது மனத்தில் பாலை வார்த்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மாரின் முக்கிய வாழ்வு ஆதாரமான ஐராவதி நதியில் (Irrawaddy) சீன-பர்மிய கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுவரும் மையித்சோன் (Myitsone) நீர்த்தேக்கத்தின் கட்டுமானப்பணிகளை இடைநிறுத்தம் செய்வதாக அரசுத்தலைவர் சார்பாக நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. இந்த முடிவு மியான்மாரில், அரசியல், சமூக மற்றும் திருச்சபைத் தளங்களில் இயங்கும் ஆர்வலர்களுக்கு கிடைத்திருக்கும் ஓர் அபூர்வமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. 360 கோடி டாலரில் கட்டப்பட்டு வந்த இந்த நீர்த்தேக்கத்திற்கு எதிரான இயக்கம், அரசியல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள், கல்வியாளர்கள் சர்வதேசக் குழுக்கள் என, பல தரப்பினரை ஒன்றிணைத்தது. நாட்டின் வடக்கேயுள்ள இந்த நீர்த்தேக்கம் சிங்கப்பூரின் பரப்பளவை ஒத்த பெரிய அளவுள்ள ஒன்றாகும். அண்மை மாதங்களில் இது குறித்துப் பேசி வந்த எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சு கி, இந்த நீர்த்தேக்கத்தால் 63 கிராமங்களின் சுமார் பத்தாயிரம் மக்கள் புலம் பெயர வேண்டியிருக்கும். பல கலாச்சாரப் பகுதிகள் நீரில் மூழ்கும். சுற்றுச்சூழலும் வெகுவாய்ப் பாதிக்கப்படும் என்று சுட்டிக் காட்டி வந்தார். இந்த நீர்த்தேக்கத்தால் தயாரிக்கப்படும் மின்சக்தியின் 90 விழுக்காடு சீனாவுக்குத்தான் செல்லும் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில், மியான்மார் அதிபர், தெய்ன் செய்ன், நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்தப் பகுதியிலேயே மிகப்பெரும் நீர்மின்சக்தி தயாரிக்கும் நீர்த்தேக்கத் திட்டங்களில் ஒன்றான இந்தத் திட்டம், மக்களின் விருப்பத்துக்கு எதிரானது, இது நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்தார்.
1948ம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, மியான்மாரில் பல்வேறு இனங்களுக்குள்ளே இடம் பெற்று வரும் மோதல்கள் இன்னும் தொடர்ந்து நடக்கின்றன. அத்துடன், 1962ம் ஆண்டிலிருந்து அந்நாட்டினர் இராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கியிருந்தனர். 2010ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் பயனாக இந்த ஆண்டில்தான் இராணுவ ஆட்சி அகற்றப்பட்டு இருக்கிறது. எனவே பல தசாப்தங்களாக தனது சொந்த மக்களின் விருப்பங்களை மதிக்காமல் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இந்த மாதிரி ஓர் அதிசயமான கருத்து வெளிவந்திருப்பது நல்ல ஒரு மாற்றுச் சிந்தனையாக வரவேற்கப்படுகின்றது. இதற்கிடையே, இந்த நீர்த்தேக்கம் தொடர்பாக மியான்மார் அரசு சீனாவிடமிருந்து சுமார் 70 கோடியை இலஞ்சமாகப் பெற்றிருக்கிறது, எனவே இந்த அறிவிப்பு நிரந்தரமானதுதானா என்ற ஒரு கேள்வி ஒரு சமூக ஆர்வலர் குழுவிடம் எழும்பியுள்ளது. எதுவாக இருந்தாலும் அரசுத்தலைவரின் தற்போதைய மாற்றுச் சிந்தனை நிரந்தரமானதாக இருக்கட்டும்.
ஆஸ்திரேலியாவில் போர்களத்துக்குச் செல்வது உள்ளிட்ட இராணுவத்தின் அனைத்து மட்டங்களிலுள்ள வேலைகளிலும் பெண்களைப் பணியாற்ற அனுமதிப்பதென அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது என்ற ஒரு செய்தி கடந்த வியாழக்கிழமை வெளியானது. ஆஸ்திரேலியாவின் இராணுவத்தில் 59 ஆயிரம் பேர் பணியில் இருக்கின்றனர். இதில் 1500 பேர் ஆப்கானில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய நிலையில் சிறப்புப் படைப் பிரிவுகளில் சேர்வதற்கான தகுதிகளைப் பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் அதில் சேரலாம். இராணுவப் பணிகளில் பீரங்கிகளை இயக்குவது உள்ளிட்ட 93 விழுக்காட்டுப் பணிகளில் பெண்கள் பங்கு பெற வழிசெய்யப்பட்டுள்ளது. ஆம். காலம் மாற மாற நாடுகளில் சிந்தனைகளும் மாறுகின்றன. மாற்றுச் சிந்தனைகள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாதை அமைக்கின்றன.
பிரிட்டனில் ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டிய சட்ட ரீதியான 65 வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுவிட்டது. ஒருவர் 65 வயதை அடைந்தவுடன் வயதைக் காரணம் காட்டி அவரைத் தொழிலிருந்து நீக்குவதற்கு தொழில் வழங்குநருக்கு இருந்த அதிகாரத்தை இந்தப் புதிய சட்டம் இத்துடன் ஒழித்துவிட்டது என்று இச்சனிக்கிழமை செய்தி வெளியானது. காலத்திற்கேற்ப சிந்தனைகளும் மாறுபடுகின்றன.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது தனது வலது கையை இழந்திருப்பவன் 12 வயதேயான சுரேஸ். தனது வலது கையை மட்டுமல்ல, தனது தாய், தந்தை, சகோதரி ஆகியோரையும் போரின் போது இழந்தான். எனினும், சுரேஸ் தனது இழப்பிலே மூழ்கியிருக்கவில்லை. அவனது சிந்தனை மாறுபட்டதாக, மாற்றுச் சிந்தனையாக இருக்கின்றது. Mines Advisory Group என்ற நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனம், 69 நிலக்கண்ணி வெடிகளையும், வெடிக்காத 15 குண்டுகளையும் சுதந்திரபுரம் என்கின்ற கிராமத்திலிருந்து அகற்றிய பின்னர் அங்கே அண்மையில் மீளக் குடியேறிய 2140 பேரில் சுரேசும் ஒருவன். "இடம்பெயர்ந்தோர் முகாமை விட்டு வெளியேறி மீண்டும் எனது வீட்டிற்குச் செல்வதில் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன். நான் மீண்டும் பள்ளிக்குப் போகவேண்டும். அத்துடன் எமது வீட்டை மீளக் கட்டுவதில் எனது பாட்டிக்கு தாமதமின்றி உதவி செய்ய வேண்டும்" என சுரேஸ் தளராத நம்பிக்கையுடன் இருக்கிறான்.
பொதுவாக நமது கலாச்சாரத்தில் வாழ்க்கையில் பிரச்சனைகள் என்றால் ஆன்மீகப் போதகர்களை அணுகுகிறோம். வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாய் அவர்களைப் பார்த்து அவர்களிடம் சென்று வழி தேடுகிறோம். இப்படித்தான் ஒருவர், குரு ஒருவரிடம் சென்று தனது பிரச்சனை மூட்டையை அவிழ்த்து வைத்தார். சுவாமி, நான் என்ன முயற்சி செய்தாலும் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டார். அவரும் அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“ஒருவனுக்கு வாழ்க்கையில் ஒரு விநோதமானப் பிரச்சனை ஏற்பட்டது. தூங்கும்போது அவன் கட்டிலுக்குக் கீழே யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வரும். திடீரென விழித்துக் கொள்வான். இப்படி, ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, பல நாட்கள் தொடர்ந்தன. அவனது தூக்கம் கெட்டது. வேலைக்குச் சென்றால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. தூக்கம் தூக்கமாக வந்தது. அப்போது அவன் ஓர் உளவியல் மருத்துவரைப் பார்க்கச் சென்றான். அவர் அவனை முழுமையாகப் பரிசோதித்து விட்டுப் பல கேள்விகள் கேட்டார். பல பரிந்துரைகளை முன்வைத்தார். சில மருந்துகளையும் எழுதிக் கொடுத்தார். அவனும் அந்த மருந்துகளைச் சாப்பிட்டான். அவர் சொன்ன ஆலோசனைகளின்படி நடந்து பார்த்தான். ஒன்றும் பயனில்லை. மறுபடியும் அதே பிரச்சனை. அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் எழுந்து விடுவான். கட்டிலுக்குக் கீழே யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு. பயத்தினால் தூக்கமே போய் விட்டது. வேறொரு உளவியல் நிபுணரைப் போய்ப் பார் என்று ஒருவர் சொல்ல, அவனும் அவரையும் சென்று பார்த்தான். முந்திய மருத்துவர் போலவே இவரும் ஆலோசனைகள் சொல்லி மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அவனும் மாத்திரைகளைச் சாப்பிட்டான். ஆனால் கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வும் மட்டும் நீங்கவே இல்லை. அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை மாற்றினான். ஆனால் நள்ளிரவில் வரும் அந்த உணர்வு மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனைச் சந்தித்தான். அவனிடம் தனது தீராதப் பிரச்சனையைச் சொன்னான். அதற்கு நண்பன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான். “கட்டிலில் படுப்பதால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ படுப்பது போல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு போய்விடும்” என்றான். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில் படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது.”
இந்தக் கதையை குரு கூறியதும் வந்தவனுக்கு அறிவு தெளிவடைந்தது. ஓர் உண்மையும் புரிந்தது. மாற்றிச் சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வைப் பெறலாம் என்று உணர்ந்தான். உலகம் தோன்றியது நாள் முதல் மனிதனின் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இன்று நாம் காணும், நாம் வாழும் உலகம். இந்த அக்டோபரில் உலக மக்கள் தொகை 700 கோடியாகி விடும். ஆயிரமாம் ஆண்டில் 27 கோடியே 50 இலட்சமாகவும், 1804ம் ஆண்டில் 100 கோடியாகவும் இருந்த உலகின் மொத்த மக்கள்தொகை, 1960ம் ஆண்டில் 300 கோடியாக அதிகரித்தது. 2100ம் ஆண்டிற்குள் இத்தொகை ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா.வின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 2050ம் ஆண்டில் மேலும் 230 கோடிப் பேர் இவ்வெண்ணிக்கையில் சேருவார்கள். அப்போது இம்மக்களின் சிந்தனைகள் எப்படி இருக்குமோ, உலகம் எத்தகைய மாற்றங்களை அடையும், மனிதன் இப்பூமிப்பந்தில் மட்டும்தான் வாழ்வானா? அல்லது வேறு கிரகங்களிலும் வாழ்வைத் தொடங்குவானா? யார் அறிவார்!
பொதுவாக, ஒரேமாதிரியான வாழ்க்கையில் சோர்வு தட்டுகிறது. எனவே வார விடுமுறை, இடையிடையே அரசு விடுமுறைகள், விழாக்கள், பின்னர் ஆண்டு விடுமுறை என மாற்றம் தேவைப்படுகிறது. அதேபோல் ஒரே மாதிரியான சிந்தனைகளும் சோர்வை வருவிக்கும். ஆதலால்தான் பிரச்சனை என்று வரும் போது ஒருவர் மட்டும் முடிவெடுப்பதில்லை. அவையைக் கூட்டுகிறார்கள், குடும்பமாகச் சேருகிறார்கள், நண்பர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன, சிந்தனைகள் பரிமாறப்படுகின்றன, தீர்வுகளும் எட்டப்படுகின்றன. மாற்றிச் சிந்திப்பதில் வெற்றி இருக்கிறது என்ற உண்மையும் உணரப்படுகின்றது.
ஓர் ஊருக்கு ஒரே தடத்தில் செல்வதை விடுத்து மாற்றுத் தடங்களில் சென்று பார்க்கலாமே, அப்போது வித்தியாசமான ஊர்கள், காட்சிகள், வேறுபட்ட பழக்கவழக்கங்களைப் பார்க்கலாம், மாறுபட்ட மனிதர்களைச் சந்திக்கலாம், அதனால் மாற்றுச் சிந்தனைகள் பிறக்கலாம், இறுதியில் இவை வெற்றிப்படிகள் கட்டப்படவும் வாய்ப்பை வழங்கலாம்.








All the contents on this site are copyrighted ©.