2011-09-30 16:11:58

அக் 01, 2011. வாழ்ந்தவர் வழியில் .... ஜிம்மி கார்ட்டர்


அமெரிக்க ஐக்கிய நாட்டின் 39வது அதிபரான ஜிம்மி கார்ட்டர், 1924ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நீர் போக்குவரத்து கல்விக்கழகத்தில் இளங்கலைக் கல்வியை முடித்த இவர், கடற்படையில் பணியில் சேர்ந்து சேவையாற்றிக் கொண்டிருக்கும்போதே அணுசக்தி இயற்பியலிலும் பட்டம் பெற்றார். 1953ம் ஆண்டு இவரின் தந்தை காலமடைந்தததால் அரசுப்பணியிலிருந்து விலகி விவசாயத்தைக் கவனிக்கத் தொடங்கினார். ஜியார்ஜியா மாநிலத்தில் தான் வாழ்ந்த பகுதியின் மக்கள் தலைவராக மதிக்கப்பட்ட இவர், சில காலம் அப்பகுதியின் கல்வி, மருத்துவம் மற்றும் நூலகத் துறைகளின் கண்காணிப்பாளராகவும் செயலாற்றினார். 1962ம் ஆண்டில் ஜியார்ஜியா மாநில செனட் அவை அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், அதன் பின் படிப்படியாக 1971ல் அம்மாநில ஆளுனராகவும், 1976ல் அமெரிக்க அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ஜனவரி முதல் 1981 ஜனவரி வரை இவர் அமெரிக்க அதிபராகப் பணியாற்றிய போது பல்வேறு பன்னாட்டு அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பானமா கால்வாய் உடன்படிக்கைகள், கேம்ப் டேவிட் ஒப்பந்தங்கள், எகிப்துக்கும் இஸ்ராயேலுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம், சோவியத் யூனியனுடனான ஒப்பந்தம், சைனாவுடன் அரசியல் உறவை உருவாக்கல் போன்றவை குறிப்பிடும்படியானவை. உள்நாட்டில் கல்வி மற்றும் இயற்கை பாதுகாப்புத் தொடர்புடையவைகளில் நல் மாற்றத்திற்கான திட்டங்களைப் புகுத்திய கார்ட்டர், சர்வதேச அளவில் மனித உரிமைப் பாதுகாப்பிற்கும் குரல் எழுப்பினார். அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அட்லாந்தாவின் Emory பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியதுடன், கார்ட்டர் மையம் என்ற ஒன்றையும் ஆரம்பித்தார். எத்தியோப்பியா, எரிட்ரியா, வட கொரியா, லிபேரியா, ஹெய்ட்டி, போஸ்னியா, சூடான், ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப்பகுதி நாடுகள், உகாண்டா, வெனிசுவேலா, நேபாளம், ஈக்குவடோர், கொலம்பியா ஆகிய நாடுகளில் மோதல்களைத் தவிர்க்க அமைதி நடுநிலையாளராகப் பணியாற்றியதுடன், அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களின் தேர்தல்களுக்கு 83 முறை கண்காணிப்புக் குழுக்களையும் தன் மையம் மூலம் அனுப்பியுள்ளார் கார்ட்டர். அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் உலகின் ஏனையப் பகுதிகளிலும் ஏழைகள் தங்கள் குடியிருப்புகளைத் தாங்களே கட்டிக்கொள்ள உதவி வருகிறது இம்மையம். ஜிம்மி கார்ட்டர், ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். சர்வதேச முரண்பாடுகளுக்கு அமைதித் தீர்வு காணவும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மேம்பாட்டிற்காகவும், பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்ததற்காக 2002ம் ஆண்டின் அமைதி நொபெல் விருது வழங்கப்பட்டார் கார்ட்டர். 25 புத்தகங்கள் எழுதியுள்ள இவர், தன் 87ம் வயதிலும் அமைதிப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றார்.







All the contents on this site are copyrighted ©.