2011-09-29 15:00:21

செப்டம்பர் 30 வாழ்ந்தவர் வழியில் ........ எலி வீசல்


தற்போதைய ரொமானியாவில் 1928ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பிறந்தவர் எலி வீசல்("Elie" Wiesel). யூதரான இவர், ஓர் எழுத்தாளர், பேராசிரியர், அரசியல்ஆர்வலர், நொபெல் விருது பெற்றவர் மற்றும் யூத இன ஒழிப்பிலிருந்து தப்பிப் பிழைத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாத்சி கொள்கைகளின்கீழ் Auschwitz, Buna, Buchenwald ஆகிய வதைப்போர் முகாம்களில் கைதியாக இருந்த தனது அனுபவத்தை “இரவு” என்ற தலைப்பிலான புகழ்பெற்ற நூல் உள்ளிட்ட 57 புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். Algemeiner Journal என்ற தினத்தாளின் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இவர் இருந்தார். 1986ம் ஆண்டில் நார்வே நொபெல் விருதுக் குழு, எலி வீசலுக்கு நொபெல் அமைதி விருதை வழங்கிய போது, இவரை "மனித சமுதாயத்தின் தூதர்" என்று அழைத்தது. ஹிட்லரின் மரண முகாம்களில் காட்டப்பட்ட மானுடத்தின் மீதான முழுவெறுப்பையும், அங்கு மனிதம் முழுமையாகத் தாழ்த்தப்பட்டதையும் அனுபவித்த எலி வீசல், அமைதி, மனித மாண்பு, பாவக்கழுவாய் ஆகியவற்றுக்கானச் சக்திமிக்க செய்தியை வழங்கியுள்ளார் என்றும் அவரைப் அக்குழு பாராட்டியது. வீசல் எபிரேயத்தையும் அதன் இலக்கியங்களையும் கற்கும்படி அவரது தந்தையும், தோராவைக் கற்கும்படி அவரது தாயும் உற்சாகப்படுத்தினர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வீசல் எபிரேய மொழிப் பேராசிரியராகப் பணியாற்றினார். வதைப்போர் முகாம் அனுபவங்களை இவர் முதலில் எழுத மறுத்தாலும் பின்னர், 1952ம் ஆண்டில் நொபெல் இலக்கிய விருது பெற்ற François Mauriac என்பவரின் வற்புறுத்தலால் தனது அனுபவங்களை எழுதினார். “உலகம் மௌனம் காத்தது” என்ற தலைப்பில் இவர் முதலில் தனது அனுபவங்களை 900 பக்கங்களாக வெளியிட்டார். பின்னர் அதனைச் சுருக்கி 127 பக்கங்களாக்கி “இரவு” என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூல் பின்னர் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.