2011-09-29 15:35:11

காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு


செப்.29,2011. இலங்கை உள்நாட்டுப் போரின்போது தங்கள் சொந்த இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் 2 இலட்சம் பேரை வேறொரு இடத்தில் குடியமர்த்தும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
உள்நாட்டுப் போரின்போது உருவாக்கப்பட்ட பல முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு ஏற்பாடு செய்துவரும் 600 ஏக்கர் நிலப்பரப்பில் குடிநீர், கழிநீர் வசதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என்று எவ்வித வசதிகளும் இல்லை என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு கூறும் இம்மக்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மீன் பிடிக்கும் தொழிலில் இருந்த இம்மக்களுக்கு தற்போது அரசு ஏற்பாடு செய்து வரும் பகுதிகள் மீன்பிடிப்பிற்கு ஏற்ற பகுதிகள் அல்ல என்பதும், தங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த பள்ளிகள் இல்லை என்பதும் இவர்கள் மறுப்புத் தெரிவிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகின்றன.








All the contents on this site are copyrighted ©.