2011-09-29 15:33:23

கர்தினால் பெர்த்தோனே : திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை


செப்.29,2011. திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை, சிறப்பாக, விசுவாசம் மற்றும் அறநெறிகள் சார்ந்த விவகாரங்களில் திருச்சபையின் ஆசிரியத்தால் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு போதிக்கப்படும் உண்மைகளைப் பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
வத்திக்கான் வானொலியின் பாதுகாவலராகிய கபிரியேல் அதிதூதரின் விழாத் திருப்பலியை வத்திக்கான் கெபியில் வத்திக்கான் வானொலிப் பணியாளர்களுக்கு இவ்வியாழனன்று நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தை மற்றும் திருச்சபையின் உண்மையான ஆசிரியப் போதனைகளை நேயர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு இப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த உண்மையானது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, இவர் ஒவ்வொரு மனிதனையும் சந்திக்க விரும்புகிறார், மனிதரால் அறியப்படவும் அன்புகூரப்படவும் விரும்புகிறார் என்றும் கர்தினால் உரையாற்றினார்.
பல்வேறு மொழிகளில் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுவோர் திறந்த இதயத்துடன் ஆவியானவர் வழிநடத்தும் பாதையை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும், இயேசுவைச் சந்திப்பதில் முதல் சாட்சிகளாக வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள் இருக்க வேண்டும் எனவும் திருப்பீடச் செயலர் வலியுறுத்தினார்.
இந்த நம் காலத்தின் மொழியிலும் மக்களின் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு கலாச்சாரங்களிலும் பல்வேறு மனநிலை கொண்டவர்களுக்கும் வழங்கும் இந்தப் பணியானது எப்போதும் எளிதாக இருக்காது என்றுரைத்த கர்தினால், இவ்வுலகோடு எப்படி உரையாடல் நடத்த வேண்டும் என்பதற்கு இவர்கள் நன்கு தயாரிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றார்.
வத்திக்கான் வானொலி இவ்வாண்டு தனது 80 வருடச் சேவையைச் சிறப்பிப்பதையொட்டி இவ்வானொலியோடு தொடர்புடைய பலரும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.