2011-09-29 15:34:53

உலகின் உணவுப் பிரச்சனைக்குத் தீர்வுகள் காணும் கணனிவழி விளையாட்டு


செப்.29,2011. Freerice.com என்ற ஒரு கணனிவழி விளையாட்டின் மூலம் ஐ.நா.வின் உலக உணவு திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் ஒரு வழி பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மக்களுக்கு இப்புதனன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
Freerice.com என்ற இவ்விளையாட்டின் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் மொழியின் வார்த்தைத் திறனில் வளர முடியும். சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒவ்வொரு முறையும் வெற்றிபெறும்போது, உலக உணவு திட்டத்திற்கு 10 தானியங்களை விளம்பர நிறுவனங்கள் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் இஸ்பானியம் ஆகிய மொழிகளில் அறிமுகமான இவ்விளையாட்டுக்கள் இப்புதன் முதல் பிரெஞ்ச் மற்றும் இத்தாலியம் ஆகிய மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
John Breen என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் 40,000 க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர் என்றும், இதன் பயனாக ஒருவரது சொல் திறமை வளரும் அதே நேரத்தில் உலகின் உணவுப் பிரச்சனைக்கும் சில தீர்வுகள் கிடைக்கின்றன என்றும் ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Freerice.com விளையாட்டின் மூலம் இதுவரை 10,000 கோடி உணவு தானியங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றும், இந்த உணவு ஒரு நாளைக்கு 4 கோடியே 80 இலட்சம் மக்களின் பசியை போக்க வல்லது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.