2011-09-28 14:37:39

ஜெனீவாவில் நடைபெறும் WIPO (World Intellectual Property Organization) நிறுவனத்தின் 49வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி


செப்.28,2011. அறிவுத்திறனை ஓர் உடைமையாகப் பேணுவதில் அனைவரும் அக்கறை காட்டவேண்டும் என்பதைத் திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, WIPO (World Intellectual Property Organization) என்றழைக்கப்படும் அறிவு சார்ந்த உடைமைகளின் பாதுகாப்பு நிறுவனத்தின் 49வது அமர்வில் பேசியபோது இவ்வாறு கூறினார்.
அறிவு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் உடைமை என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் தொமாசி, நமது அறிவுவழி கண்டுபிடிக்கப்படும் உண்மைகள் அனைத்து மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அறிவைப் பயன்படுத்தும் வழிகளை ஆராயும் ஒரு கருத்தரங்கில் ஈடுபட்டுள்ள இந்த ஐ.நா.அவை, உலகெங்கும் பார்வைத்திறன் அற்ற 284,000,000 மக்களையும் கருத்தில் கொண்டிருப்பதை பேராயர் பாராட்டினார்.
அறிவுத்திறன் உடைமைகள் என்று எண்ணும்போது, பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வழிகளில் மருத்துவத்தைப் பயன்படுத்தும் பல குழுவினரின் கண்டுபிடிப்புக்களையும் இந்த அகில உலக அவை மதிக்கவேண்டும் என்று பேராயர் தொமாசி வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.