2011-09-28 15:47:34

செப். 29, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, என்ரிக்கோ ஃபெர்மி


புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞர் என்ரிக்கோ ஃபெர்மி 1901ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி உரோம் நகரில் பிறந்தார். சிறு வயதிலேயே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் காட்டிய இவர், பீசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்று, உரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21ம் வயதில் முனைவர் பட்டம் பெற்றார். 1934ம் ஆண்டு, முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக் கொள்கையைத் தோற்றுவித்தார்.
சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942ல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக்காகவும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938ம் ஆண்டில் ஃபெர்மிக்கு இயற்பியல் நொபெல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைத் தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக ஃபெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.
1954 நவம்பர் 28ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவில், தன் 53ம் வயதில் புற்று நோயால் காலமானார் ஃபெர்மி.








All the contents on this site are copyrighted ©.