2011-09-28 14:38:25

அக்டோபரில் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதத்தையொட்டி அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை


செப்.28,2011. வாழத் தகுதியற்றவர்கள் என்று தீர்மானித்து ஒதுக்கிவைக்கும் இவ்வுலகப் போக்கிற்கு எதிராக, முழுவாழ்வை அளிக்க வந்தேன் என்று இயேசு கூறியுள்ள உறுதிமொழி ஒலிக்கிறது என்று அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதம் வருகிற வார இறுதி முதல் துவங்கவிருக்கும் சூழலில், அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வை வலியுறுத்தும் செயல்பாடுகள் குழுவின் தலைவரான கர்தினால் Daniel DiNardo ஆயர் பேரவையின் சார்பில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கருக்கலைப்பு மற்றும் கருத்தடை ஆகியவற்றை நலக்காப்பீட்டுத் திட்டங்களில் இணைக்க அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் இவ்வெள்ளியன்று நிறைவுக்கு வரும் வேளையில், இந்த முயற்சிகளை கத்தோலிக்கர்கள் வன்மையாக எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்க ஆயர் அவை வலியுறுத்தியுள்ளது.
கருவில் வளரும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் ஆகியோர் சமுதாயத்தின் பார்வையில் பயனற்றவர்கள் என்று கருதப்படுவது மிகவும் தவறான ஓர் எண்ணம் என்றும் கிறிஸ்து கொணர்ந்துள்ள வாழ்வை அனைவரும் முழுவதும் பெற வேண்டும் என்பதை உலகிற்கு பறை சாற்றவே இந்த வாழ்வை வலியுறுத்தும் மாதம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் கர்தினால் DiNardo கூறினார்.








All the contents on this site are copyrighted ©.