2011-09-27 14:48:26

செப்டம்பர் 28, வாழ்ந்தவர் வழியில்... லூயி பாஸ்டர்


லூயி பாஸ்டர்(Louis Pasteur). இவர் ஒரு புகழ் பெற்ற பிரெஞ்சு நுண்ணுயிர் ஆய்வாளரும் வேதியியல் ஆய்வாளரும் ஆவார். நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள், இவை பற்றிய இவரது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளுக்காக அறிவியல் உலகில் இவர் பெரிதும் நினைவுகூரப்படுகிறார். இவரது கண்டுபிடிப்புக்கள், பேறுகாலக் காய்ச்சலால் ஏற்படும் தாய்மார் இறப்புக்களைக் குறைத்தன. வெறிநாய் உட்பட வெறிநோய் பிடித்த விலங்குகளின் கடியில் இருந்து காக்க முதன்முதலாக தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் இவரே. மேலும், இவர் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டுபிடித்தார். பாலும், குடிக்கும் கள்ளும் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்டரைசேஷன் (pasteurization) என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் Ferdinand Cohn மற்றும் Robert Koch ஆவர். பிரான்சில் 1822ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பிறந்த லூயி பாஸ்டர், 1895ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி காலமானார். 1854ம் ஆண்டில் அறிவியல் துறையிடம் பேசிய போது, “ஆராய்ச்சித் துறையில், தயாராக இருக்கும் அறிவிற்கே வாய்ப்புகள் வந்து சேரும்” என்று லூயி பாஸ்டர் சொல்லியிருக்கிறார்







All the contents on this site are copyrighted ©.