2011-09-27 13:27:13

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கரின் உறுதிமொழி


செப் 27, 2011. பிலிப்பைன்சின் மணிலாவில் வெள்ளப்பெருக்கு இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூரும் விதமாகக் கூடிய மரிகீனா நகர் கத்தோலிக்கர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஒன்றிணைந்து எடுத்துள்ளனர்.
இந்நகரின் தூய வளன் கோவிலில் அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் நடவடிக்கையாளர்கள், சமூக மற்றும் திருச்சபை அதிகாரிகள் முன்னிலையில் இத்தீர்மானத்தை எடுத்தனர் பங்குத்தள மக்கள்.
திருப்பலியின் முடிவில் தங்கள் கைகளில் மெழுகுதிரிகளை ஏந்தியவர்களாய், கைகளை உயர்த்திய வண்ணம், கடவுளின் படைப்புகளைப் பேணிப் பாதுகாப்பதாகவும், ஏனையோருடன் அதனை சுயநலமின்றி பகிர்ந்து கொள்வதாகவும், ஞானமுடன் பயன்படுத்த உள்ளதாகவும் உறுதியெடுத்தனர் அவர்கள்.
இயற்கைப் பாதுகாப்பிற்கான உறுதிமொழியை எடுத்த இத்திருப்பலியில் மறையுரையாற்றிய பிலிப்பைன்சின் ஆன்டிபோலோ ஆயர் கபிரியேல் ரேயெஸ், இறைவன் எப்போதும் மன்னிக்கிறார், மனிதன் அவ்வப்போது மன்னிக்கிறான், ஆனால் இயற்கை ஒருபோதும் மன்னிப்பதில்லை என்றார்.
இதற்கிடையே, இச்செவ்வாய் காலை பிலிப்பைன்ஸ் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற பெரும்புயலாலும் வெள்ளப்பெருக்காலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.