2011-09-26 16:16:38

செப்டம்பர் 27 வாழ்ந்தவர் வழியில்..... தூய வின்சென்ட் தெ பவுல்


“ஏழைகளிடம் செல்லுங்கள், கடவுளைக் காண்பீர்கள்”;
“ஏழைகள் உங்களுக்குப் போதிப்பதற்கு நிறைய வைத்துள்ளார்கள். நீங்கள் அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்”;
“எனது அருமைச் சகோதரர்களே கடவுளை அன்பு செய்யுங்கள். உங்களது கைகளின் பலத்தோடும் புருவங்கள் சிந்தும் வியர்வையோடும் கடவுளை அன்பு செய்யுங்கள்”
இதே போன்ற பல பாடங்களைச் சொல்லி அவற்றைத் தாமே வாழ்நது காட்டியவர் தூய வின்சென்ட் தெ பவுல். கருணை, தாழ்மை, தாராளம் ஆகிய பண்புகளில் சிறந்து விளங்கியவர் இவர். கத்தோலிக்கத் திருச்சபையிலும் ஆங்லிக்கன் சபையிலும் தூயவராகப் போற்றப்படும் வின்சென்ட் தெ பவுல், 1581ம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதி பிரான்ஸ் நாட்டு Pouyல் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். துலுஸ் நகரில் இறையியலை முடித்த இவர் 1600ம் ஆண்டில் குருவானார். 1605ம் ஆண்டில் மார்செய்ல் (Marseille) நகரிலிருந்து கப்பலில் திரும்பிக் கொண்டிருந்த போது துருக்கிக் கடற்கொள்ளையர் இவரைப் பிடித்து Tunis ல் அடிமையாக விற்றனர். இவர் தனது எஜமானரையே கிறிஸ்தவராக மாற்றிய பின்னர் 1607ம் ஆண்டு அங்கிருந்து தப்பித்தார். பிரான்சுக்குத் திரும்பிய இவர், 1612ம் ஆண்டில் Gondi என்ற பிரபுக்கள் குடும்பத்திற்குச் சேவை செய்யத் தொடங்கினார். திருமதி தெ கோந்தி என்பவரின் ஆன்மீக ஆலோசகராக இருந்து கொண்டு அவரின் உதவியினால் அவர்களது பண்ணைத் தோட்டத்தில் வேலை செய்த விவசாயிகளுக்குப் போதித்தார். பின்னர் ஊர் ஊராய்ச் சென்றும் நற்செய்தி அறிவித்தார். அடிமைகளுக்கும் சேவை செய்தார். 1625ம் ஆண்டில் வின்சென்ட் தெ பவுல் மறைபோதகச் சபை ஒன்றைத் தொடங்கினார். முப்பதாயிரம் ஆப்ரிக்க அடிமைகளுக்குச் சேவை செய்யத் தனது சபையினரை அனுப்பினார். 60 இலட்சம் டாலர் செலவழித்து 1,200 அடிமைகளை மீட்டார். ஏழைகளுக்கு உதவும்படிப் பணக்காரப் பெண்களைத் தூண்டினார். அவர்கள் கொடுத்த பெருந்தொகையைக் கொண்டு மனநோயாளிகள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு மருத்துவமனைகளைக் கட்டினார். வீடின்றி தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தார். பாலியல் வன்செயலுக்காக இராணுவத்தினரிடம் சிக்கிய இளம்பெண்களைக் காப்பாற்றினார். கடவுளது பராமரிப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்ட வின்சென்ட் தெ பவுல் 1660ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி காலமானார். அவர் இறந்து 53 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது உடலை மீண்டும் வெளியே எடுத்தனர். அதனை நேரில் பார்த்த ஒருவர் சொல்கிறார் – கண்களும் மூக்கும் மட்டும் கொஞ்சம் பழுதடைந்திருந்தன என்று. 1737ம் ஆண்டில் திருச்சபையில் தூயவர் நிலைக்கு உயர்த்தப்பட்டார் வின்சென்ட் தெ பவுல். பிறரன்பு நிறுவனமான தூய வின்சென்ட் தெ பவுல் கழகம், தற்சமயம் 132 நாடுகளில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.