2011-09-25 15:05:09

திருத்தந்தையின் 21 வது வெளிநாட்டுத் திருப்பயண நிறைவு


செப்.25,2011. “மக்களோடு சேர்ந்து செபிக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும், திருப்பலி நிகழ்த்தவும் ஜெர்மன் நாட்டுக்கான இத்திருப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்” எனச் சொல்லி இச்சனிக்கிழமை பிற்பகலில் ஃப்ரைபூர்க் நகரில் தனது திருப்பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் இவ்வியாழனன்று இத்திருப்பயணத்தை ஆரம்பித்தத் திருத்தந்தை, இப்பயணத்தின் மூன்றாவது நாளாகிய இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.50 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 8.20 மணிக்கு, ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஹெல்மட் ஜோசப் மைக்கிள் கோலை ஃப்ரைபூர்க் பேராயர் இல்லத்திலுள்ள குருத்துவக் கல்லூரியில் சந்தித்தார். பின்னர் அங்கு, 15 ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்த ஆர்த்தடாக்ஸ் சபையினர், 1917ம் ஆண்டு அக்டோபரில் இடம் பெற்ற இரஷ்ய புரட்சி, இன்னும், கிரீஸ், செர்பியா, கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகளிலிருந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவர்கள். இச்சந்திப்புக்குப் பின்னர் சுமார் அறுபது குருத்துவ மாணவர்களோடு சிறிது நேரம் செலவழித்தார் திருத்தந்தை. அந்த இல்லத்தின் சிற்றாலயத்தில் திருநற்கருணை ஆராதனையை முடித்திருந்த அவர்களிடம் திருவிவிலியத்தின் முக்கியத்துவம் மற்றும் விசுவாசத்திற்கும் அறிவிற்கும் இடையேயான உறவு பற்றிப் பேசினார்.

ஜெர்மனியின் தென் பகுதியிலுள்ள இந்த ஃப்ரைபூர்க் நகர் கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டுள்ளது. திருத்தந்தையின் கார் ஃப்ரைபூர்க் விமான நிலையத்திலிருந்து சென்ற போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாலைகளின் ஓரங்களில் நின்று கொடிகளை ஆட்டித் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டனர். இந்நகரின் குருத்துவக் கல்லூரியில் ஜெர்மன் கத்தோலிக்க மையக் குழுவினரை இச்சனிக்கிழமை மாலை 6.15 மணிக்குச் சந்தித்தார் திருத்தந்தை. இக்குழு, பொதுநிலை கத்தோலிக்கருக்காக 1952ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது சமுதாயத்தில் முக்கிய பொறுப்பிலுள்ள தனியாட்களைக் கொண்ட அமைப்பாகும். இச்சிறு செபக் குழுக்கள் உலகில் தீபங்களாகச் சுடர்விட இறைவனிடம் செபித்தார் திருத்தந்தை. பின்னர் ஃப்ரைபூர்க் பேராயர் இல்லத்திலிருந்து ஆறு கிலோ மீட்டரில் இருக்கின்ற கண்காட்சி அரங்கத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இவ்விடத்தில், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், இசைக்கச்சேரிகள் என 35க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவ்விடம் சென்றதும் அவர் குண்டு துளைக்காத கண்ணாடியால் மூடப்பட்ட காரில் ஏறினார். அங்கு சுமார் முப்பதாயிரம் இளையோர் கூடியிருந்தனர். இளையோர் என்றால் ஆரவாரத்திற்குச் சொல்லத் தேவையில்லை.....

இங்கு நடந்த திருவழிபாட்டில் முதலில் ஃப்ரைபூர்க் பேராயர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் ஒன்பது இளையோர் தங்களது சாட்சிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டனர்.

திருத்தந்தையும், “கிறிஸ்துவே உலகின் ஒளி” என்பதை மையமாக வைத்து, “விசுவாசத்தின் வல்லமை” பற்றி இளையோரிடம் பகிர்ந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்ட 26 வயது கத்ரீன் டோர் ஒரு நிருபரிடம் சொல்கிறார் : “திருச்சபை இந்நாட்களில் ஊடகத்துறையில் மிக எதிர்மறையாக விமர்சிக்கப்படுகின்றது. எனவே இளையோராகிய நாங்கள் திருச்சபை குறித்துப் பெருமைப்பட வேண்டியது அவசியம். திருச்சபையை சிலர் தரம் தாழ்த்தினாலும் அது தன்னிலே தீயது அல்ல” என்று. இத்தகைய நம்பிக்கையூட்டும் இளையோரின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து இந்த மூன்றாம் நாளையப் பயண நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் ஜெர்மன் நாட்டுக்கான இத்திருப்பயணத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் ஒரு மணி 30 நிமிடத்திற்கு ஃப்ரைபூர்க் விமானநிலையத்துக்கு அருகிலுள்ள பெரிய திடலில் ஜெர்மனியின் 27 மறைமாவட்டங்களின் ஆயர்களுடன் கூட்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. ஜெர்மன் நாட்டுக்கான இத்திருப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய இத்திருப்பலியில் சுமார் ஒரு இலட்சம் விசுவாசிகள் மிகுந்த ஆர்வமுடன் பங்கு கொண்டனர். இவர்களிடம் ஜெர்மன் திருச்சபை சமுதாயத்தில் புளிக்காரமாக இருக்குமாறு வலியுறுத்தினார்.
திருப்பலியின் இறுதியில் ஆற்றிய மூவேளை செப உரையில் தாழ்மைப் பண்பின் மேன்மையை எடுத்துச் சொன்னார்.
தாழ்மையாய் இருப்பவர்கள் தரையில் தங்களது சொந்தக் கால்களை ஊன்றி நிற்பவர்கள். கிறிஸ்துவுக்கும் அவரது அருள்மொழிகளுக்கும் செவிமடுப்பவர்கள். அவர்கள் திருச்சபையையும் அதன் உறுப்பினர்களையும் இடைவிடாது புதுப்பிப்பவர்கள் என்றார்.

இத்திருப்பலியை நிறைவு செய்த பின்னர் சுமார் 90 ஆயர்களுடன் மதிய உணவு அருந்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மாலையில் ஃப்ரைபூர்க் பேராயர் இல்லத்தில் எல்லாரிடமிருந்து பிரியாவிடை பெற்றார். இந்த நான்கு நாட்கள் திருப்பயணம் ஜெர்மன் கத்தோலிக்கரில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புவோம். கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.