2011-09-25 14:43:07

செப்டம்பர் 26 வாழ்ந்தவர் வழியில்.... திருக்குறள் வீ. முனிசாமி


தமிழறிஞரும் அரசியல்வாதியுமான வீ.முனிசாமி 1913ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி என்ற ஊரில் பிறந்தார். இவா், உலகப் பொதுமறை நூலாகிய திருக்குறள் பற்றிய வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய முனிசாமி, தமிழகத்தில் மட்டுமல்லால், தில்லி, மும்பை, இன்னும், மலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் திருக்குறளைப் பரப்பும் பணியைத் தொடர்ந்தார். தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் இவருக்கு வழங்கப்பட்டன. ஆனாலும், 1951ம் ஆண்டு சனவரி 23ம் தேதியன்று குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறுநிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார், முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே வீ.முனிசாமிக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார். திருக்குறள் வீ.முனிசாமி அல்லது "திருக்குறளார்' என்று அறியப்படும் இவர் பல நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம் என்ற நூல், இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற அழியாப் புகழை இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த இவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார். 1935ம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலக்கட்டத்தில் வீ.முனிசாமியின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. இவரின் பணியை "குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. திருக்குறள் வீ.முனிசாமி 1994ம் ஆண்டு சனவரி 4ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.