2011-09-25 15:06:37

இளையோருக்குத் திருத்தந்தை வழங்கிய உரை


செப்.25,2011. கிறிஸ்துவில் விசுவாசம் கொள்பவர்கள், வாழ்க்கையின் இருளான நேரங்களில்கூட ஒளியைப் பார்க்கும் சக்தியைப் பெற்றுப் புதிய நாளின் விடியலைக் காண்கிறார்கள். நமது மனித முயற்சிகளோ அல்லது இந்த நம் சகாப்தத்தின் தொழிற்நுட்ப முன்னேற்றமோ உலகிற்கு ஒளியைக் கொண்டு வராது. நல்லதோர் நீதியான உலகை உருவாக்குவதற்கான நமது முயற்சிகள் இந்த வரையறைகளால் மீண்டும் மீண்டும் எப்படி தொடர்ந்து அடிவாங்குகின்றன என்பதை நாம் அனுபவித்து வருகிறோம். போரும் பயங்கரவாதமும், பசியும் நோய்களும், கடும் வறுமையும் இரக்கமற்ற அடக்குமுறையும் உலகில் இன்றும் இருக்கின்றன. எனவே சமுதாயத்தில் தீமையின் அனைத்து வடிவங்களையும் வேரோடு பிடுங்கி எறியுங்கள். அரைகுறைக் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டாம். விசுவாச அர்ப்பணமின்றி இருப்பவர்கள் தங்களது திருச்சபைகளுக்கு எதிரிகளைவிட அதிகச் சேதங்களைக் கொண்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றிலும் இருளும் தெளிவற்ற நிலையும் சூழ்ந்து இருந்தாலும் நாம் ஒளியைப் பார்க்கிறோம். அந்த ஒளி சிறிய சுடராக இருந்தாலும், சக்திமிக்கதும் வெற்றி அடைய முடியாததுமான இருளைவிட சக்தியானதாக இருக்கின்றது. சாவினின்று உயிர்த்த கிறிஸ்து இந்த உலகில் சடர் விடுகிறார். எல்லாமே நம்பிக்கை இழந்ததாகத் தெரியும் இடங்களில்கூட கிறிஸ்து தனது ஒளியை பளபளப்பாகப் பாய்ச்சுகிறார். ஒளி தனித்து இருக்காது. தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஒளிர்விக்கும். விசுவாசத்தில் நாம் தனியாக இல்லை. விசுவாசிகளின் குழுமத்தோடு இருக்கிறோம். எனவே இதில் ஒருவர் மற்றவருக்கு எடுத்துக் காட்டுகளாக இருப்போம்.








All the contents on this site are copyrighted ©.