2011-09-24 16:01:34

திருத்தந்தையின் 21 வது வெளிநாட்டுத் திருப்பயணம் – பெர்லின் மற்றும் எர்ஃபூர்ட் நகரங்களில் திருத்தந்தை


செப்.24,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மனிக்கு மேற்கொண்டு வரும் நான்கு நாட்கள் கொண்ட இத்திருப்பயணம் பற்றிய விபரங்களை அந்நாட்டில் மட்டும் பல நாடுகளின் சுமார் நான்காயிரம் நிருபர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக, சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் பணியிலிருக்கின்ற ஒரு ஜெர்மானியத் திருத்தந்தை தனது தாயகத்திற்கு மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ முதல் பயணமாக இது இருப்பதால் கண்கொத்திப் பாம்பு போல் இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்வுகளை கவனித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஜெர்மன் கத்தோலிக்கர் திருச்சபையை விட்டு விலகியுள்ளனரே. இவர்களுக்கு அவர் சொல்வது என்ன என்ற ஆர்வமும் ஊடகவியலாளரிடம் இருக்கின்றது. ஆயினும் திருத்தந்தை அந்நாட்டில் கடந்த இரண்டரை நாட்கள் நிகழ்த்திய நிகழ்வுகள் குறித்துச் செய்தி வெளியிட்ட ஜெர்மன் நாளிதழ் Frankfurter Allgemeine Zeitung, “பெர்லினுக்கு மேலே சூரியன்” என்ற அடையாளத்துடன் திருத்தந்தையின் கருத்தாழமிக்க உரைகள் பற்றிய கருத்தை வெளியிட்டிருந்தது. கிறிஸ்தவ மரபில் சூரிய ஒளி, உலகை ஒளிர்விக்கும் இறையொளியைக் குறிப்பதாகும். ஆம். உரோமை ஆயரான திருத்தந்தை, இதுவரை ஜெர்மனியில் அரசியலோ பொருளாதாரமோ பேசவில்லை. ஆனால் கடவுளின் ஒளி பற்றி, கடவுள் பற்றிப் பேசி வருகிறார். இதுவரை நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடும் ஊடகங்கள்,
“சமயச் சார்பற்ற போக்கு அதிகரித்து வரும் இன்றைய உலகில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் முஸ்லீம்களும் கடவுளின் இருப்புக்குச் சாட்சிகளாகத் திகழ வேண்டும்; யூதம், இசுலாம் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளைச் சந்தித்த போது, சமூக வாழ்க்கையில் மதக்கூறுகளின் முக்கியத்துவத்தை அவர்களிடம் வலியுறுத்தினார்; கடவுள் புறக்கணிக்கப்படும் உலகு எப்படி இருக்கும் என்பதற்கு நாத்சிசம் முன்னறிவிப்பாக இருக்கின்றது; உலகம் எவ்வளவு தூரம் கடவுளை விட்டு விலகுகின்றதோ அவ்வளவு தூரம் மனிதன் தனது வாழ்வை இழக்கும்படி ஆகின்றது ” என்று குறிப்பிடுகின்றன.
ஆம், இவ்வெள்ளி பகல் 12.20 மணியளவில் எர்ஃபூர்ட்டில் மார்ட்டின் லூத்தர் அகுஸ்தீனியன் சபைத் துறவியாக வாழ்ந்த இடத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாட்டில் கலந்து கொண்டு மறையுரையாற்றிய போதும், “கிறிஸ்தவ விசுவாசம் நம் வாழ்க்கையின் அடித்தளம்; எனவே கிறிஸ்தவ சபைகள் மத்தியில் மலரும் ஒன்றிப்பு, பலன்கள் மற்றும் குறைகளைக் கணிப்பதால் வளர்வது அல்ல, மாறாக, நம் எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் விசுவாசம் மிக ஆழமாக நுழைவதன் வழியாக மட்டும் வளர்கிறது; இயேசு, கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்காகச் செய்த செபத்தில் நமது ஒன்றிப்பின் மையத்தைக் காண்கிறோம்; இந்தச் செபத்தில் உண்மையிலேயே ஈர்க்கப்பட நம்மை அனுமதித்தால் நாம் அனைவரும் ஒரே சபையாக மாறுவோம்” என்றார் திருத்தந்தை.
ஜெர்மனியில் குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை இவ்வெள்ளிக்கிழமை பிற்பகலில், எர்ஃபூர்ட் குருத்துவக் கல்லூரியில் சந்தித்தார் திருத்தந்தை. அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் கண்டு மிகவும் வருந்தி அவர்கள் மீது மிக ஆழமான பரிவு காட்டினார். குருக்களால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை சுமார் அரைமணி நேரம் சந்தித்துப் பேசிய அவர், இத்தகைய குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில் திருச்சபை மிகுந்த முனைப்புடன் இருக்கின்றது. மேலும், சிறாரையும் இளையோரையும் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளுக்குத் திருச்சபை தன்னை அர்ப்பணித்துள்ளது என்றார். 1950கள் மற்றும் 1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக நூற்றுக்கணக்கானோர் கூறினர். ஜெர்மனியின் 27 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் 18ல் இக்குற்றச்சாட்டுகள் உள்ளன. கத்தோலிக்கர் திருச்சபையைவிட்டு விலகுவதற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது.

இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 4.50 மணிக்கு ஹெலிகாப்டரில் எர்ஃபூட்டிலிருந்து Etzelsbach சென்றார் திருத்தந்தை. அந்நகரின் Wallfahrtkapelle அன்னைமரியா திருத்தலம் சென்றார். இந்தச் சிறியத் திருத்தலத்திலுள்ள மரத்தாலான அன்னைமரி திருவுருவம், 16ம் நூற்றாண்டில் இந்த இடத்தில் குதிரைச் சவாரி செய்பவர்களால் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னர் எண்ணற்ற மக்கள் இங்கு திருப்பயணமாக வருகின்றனர். இத்திருத்தல வளாகத்தில் விசுவாசிகளுடன் சேர்ந்து மாலைத் திருப்பகழ்மாலை செபித்தார் திருத்தந்தை.
இதன்பின், விசுவாசிகளை ஆசீர்வதித்து மீண்டும் எர்ஃபூர்ட் குருத்துவக் கல்லூரி சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்துடன் இப்பயணத்தின் இரண்டாவது நாளைய நிகழ்ச்சிகள் முற்றுப்பெற்றன.
இத்திருப்பயணத்தின் மூன்றாவது நாளாகிய இச்சனிக்கிழமை காலை உள்ளூர் நேரம் 9 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பகல் 12.30 மணிக்கு எர்ஃபூர்ட் Domplatz ல் திருப்பலியைத் தொடங்கினார்.
இத்திருப்பலியின் துவக்கத்தில் எர்ஃபூர்ட் ஆயர் ஜோக்கிம் வாங்கே திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றுப் பேசினார். திருப்பலியை உள்ளூர் நேரம் காலை 11 மணியளவில், அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு நிறைவு செய்த திருத்தந்தை, அங்கிருந்து நேரடியாக எர்ஃபூர்ட் விமான நிலையம் சென்று, 380 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள Lahr நகருக்கு செர்மானிய விமானம் Luftwaffe ல் பயணம் மேற்கொண்டார். விமான நிலையம் வந்திருந்த அப்பகுதியின் அரசு அதிகாரிகளையும், ஃப்ரெய்பூர்க் பேராயர் மற்றும் குழுவினர்களையும் மரியாதை நிமித்தம் சந்தித்த பின், உள்ளூர் நேரம் 1 மணியளவில், 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஃப்ரெய்பூர்க் நகர் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். ஃப்ரெய்பூர்க் பேராலயத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னரே, தன் காரிலிருந்து இறங்கி, மக்கள் காணும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு, நான்கு பக்கமும் கண்ணாடி பொருத்தப்பட்ட பாப்பிறை வண்டியில் ஏறி பயணம் மேற்கொண்டார். ஃப்ரெய்பூர்க்கின் நமதன்னை பேராலயத்தில் திருத்தந்தையோடு இணைந்து செபிப்பதற்கென ஏறத்தாழ 800 பேர் குழுமியிருந்தனர். ஆண் பெண் துறவிகள், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர் என தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே இதில் பங்குபெற்றனர். இவர்களுடன் இணைந்து செபித்தபின் ஃப்ரெய்பூர்க் மக்களுக்கென ஒரு சிறு உரை ஒன்றும் வழங்கினார் பாப்பிறை.
உங்களோடு இணைந்து செபிக்க இங்கு வந்துள்ளேன். இத்திருப்பயண நாட்கள் பயனுடையதாக இருக்கவும், நம் விசுவாசம் ஆழப்படுத்தப்படவும், நம் நம்பிக்கைகள் பலப்படுத்தப்படவும், அன்பு அதிகரிக்கப்படவும் உங்கள் செபங்களை வேண்டுகிறேன் என்றார் திருத்தந்தை.
ஃப்ரெய்பூர்க் பேராலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பிற்குப் பின், அந்த உயர்மறைமாவட்டத்தின் ‘Collegium Borromaeum' குருமடம் சென்ற திருத்தந்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.