2011-09-24 16:11:13

செப்டம்பர் 25, வாழ்ந்தவர் வழியில்... உடுமலை நாராயணகவி


கவிஞரும், நாடக எழுத்தாளருமான உடுமலை நாராயணகவி உடுமலைப் பேட்டைக்கு அருகே ஒரு கிராமத்தில் எளியதோர் குடும்பத்தில் 1899ம் ஆண்டு, செப்டம்பர் 25ம் தேதி பிறந்தார். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ்பெற்ற இவர், வேலைக்காரி, பராசக்தி, இரத்தக் கண்ணீர், தேவதாஸ் போன்ற பல பிரபலமான திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின், பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
பக்திப்பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலங்களில், எல்லாரும் புரிந்துகொள்ளும் எளிய தமிழில் மண்ணின் மணத்தைக் கலந்து, தமிழ் திரைப்படப்பாடல்களுக்கு புதிய பாதையை விட்டுச்சென்ற முன்னோடி இவர்.
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள உடுமலை நாராயணகவி, இனிமையான குணம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தனக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
தமிழறிஞர்களால் மதிக்கப்பட்ட இவர், கவிராயர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். 1981ம் ஆண்டு மறைந்த உடுமலை நாராயணகவியின் நினைவாக, உடுமலையில் பகுத்தறிவுக் கவிராயர் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.