திருத்தந்தையின் 21 வது வெளிநாட்டுத் திருப்பயணம் – பெர்லின் மற்றும் எர்ஃபூர்ட் நகரங்களில்
திருத்தந்தை
செப்.23,2011. ஜெர்மன் மக்களைச் சந்தித்து கடவுளைப் பற்றிப் பேசுவதற்குத் தனது தாயகமான
ஜெர்மனிக்கு இத்திருப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வியாழன்
தொடங்கிய ஜெர்மனிக்கான நான்கு நாட்கள் திருப்பயணத்தின் நோக்கத்தை தனது முதல் உரையிலேயே
தெளிவுபடுத்தி முதல் நாளைய நிகழ்வுகளை நடத்தினார். இவ்வியாழனன்று முதல் நிகழ்வுகளாக,
தலைநகர் பெர்லினில் ஜெர்மன் அரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்து உரையாடினார்
திருத்தந்தை. மாலையில் உள்ளூர் நேரம் நான்கு மணிக்கு அதாவது இந்திய நேரம் வியாழன் இரவு
7.30 மணிக்கு பெர்லின் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 5 கிலோ மீட்டரில் இருக்கின்ற வரலாற்று
சிறப்புமிக்க Reichstag என்ற நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் சென்றார். இது 1894ம் ஆண்டில்
ஜெர்மன் பேரரசின் நாடாளுமன்றமாக கட்டப்பட்டது. பின்னர், 1933ம் ஆண்டில் எதிரிகள் வைத்த
தீ விபத்தால் இக்கட்டிடம் மிகவும் சேதமடைந்தது. இதற்குப் பின்னர் அடால்ப் ஹிட்லர் தனது
அதிகாரப்பிடியை வலுப்படுத்தி நாத்சிகளின் பணியிடமாக இதனை மாற்றினார். 1945ம் ஆண்டில்
சோவியத் படைகள் Reichstag ஐ ஆக்ரமித்து சிவப்புக் கொடியை ஏற்றின. இந்த ஆக்ரமிப்பை எதிர்த்து
3 இலட்சத்து 50 ஆயிரம் பெர்லின் மக்கள் 1948ம் ஆண்டில் போராடினர். 1961ம் ஆண்டில் Reichstag
கிற்கு அருகில் பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது. பின்னர் Reichstag, கிழக்கு ஜெர்மனி அரசு
கூடும் இடமானது. 1989ம் ஆண்டில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. 1990ம் ஆண்டு அக்டோபர்
3ம் தேதி இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்தன. அதன் பின்னர் சேதமடைந்திருந்த இக்கட்டிடம்
சீரமைக்கப்பட்டு 1999ம் ஆண்டில் ஜெர்மனி கூட்டுக் குடியரசின், Bundestag என்றழைக்கப்படும்
நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது. இந்நாடாளுமன்றம் 622 உறுப்பினர்களைக் கொண்டது.இந்த
வரலாற்று சிறப்புமிக்க Reichstag கட்டிடத்திற்குச் சென்ற திருத்தந்தையை ஜெர்மன் கூட்டுக்
குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் Norbert Lammert வரவேற்று அந்த அவைக்கு அழைத்துச்
சென்றார். அவர் ஆற்றிய வரவேற்புரையில், ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், திருத்தந்தை
யாக இருந்த போது ஜெர்மனி ஒரு நாடாக இருக்கவில்லை. உறுதியான மதம் மற்றும் சமயப் போர்களை
நூற்றாண்டுகளாக கொண்டிருந்த நாடு இது. இப்போது நாம் கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு கிறிஸ்தவ
விசுவாச மரபுகளின் தாக்கத்தையும் கொண்டிருக்கின்றது என்று கூறினார். அச்சமயம், திருத்தந்தையின்
இவ்வருகைக்கும், திருச்சபையில் குருக்களின் பாலியல் முறைகேடுகள், திருத்தந்தையின் உறுதியான
ஒழுக்கநெறிப் போதனைகள், ஓரினச்சேர்க்கைத் திருமணத்திற்கு எதிரானக் கத்தோலிக்கத் திருச்சபையின்
நிலைப்பாடு போன்ற விவகாரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்டிடத்திற்கு வெளியே சுமார்
100 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் எட்டாயிரம் பேர் போராட்டம் நடத்தினர். ஆனால்
இது எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட குறைவாகவே இருந்ததாக ஊடகங்கள் கூறின. சுமார் ஆறாயிரம்
காவல்துறையினர் பெர்லின் நகர் முழுவதும் பணியில் இருந்தனர். இவ்வளவு எதிர்ப்புகள் காட்டப்பட்ட
போதிலும், பலத்த நீண்ட நேரக் கைதட்டல்வரவேற்புகளுக்கு மத்தியில் ஜெர்மன் நாடாளுமன்றத்தில்
இருபது நிமிடங்கள் உரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஜெர்மானியர்கள் மதத்தைப்
புறக்கணிக்க வேண்டாம், வெற்றியைத் தேடுவதைவிட நீதியைத் தேடுங்கள் என்று குரல் கொடுத்தார்.
பின்னர் இந்த Reichstag கட்டிடத்தில் 15 பேர் அடங்கிய யூதமதப் பிரதிநிதிக் குழுவினரைச்
சந்தித்தார் திருத்தந்தை. ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் மற்றும் ஜெர்மன் யூதர்களின் மத்திய
அவைத் தலைவர் Dieter Graumannம் வரவேற்புரை நிகழ்த்தினர். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். யூதமதப்
பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர், அந்த Reichstag கட்டிடத்திலிருந்து பெர்லின் நகர் ஒலிம்பிக்
விளையாட்டுத் திடலுக்குச் சென்றார். இந்தத் திடலானது நாத்சிகளால் 1936ல் கட்டப்பட்டது.
பெர்லின் நகர் பேராயர் கூற்றுப்படி, அந்நகரில் மூன்றில் ஒருவர் கிறிஸ்தவர். இந்த ஒலிம்பிக்
திடலில் சுமார் எழுபதாயிரம் விசுவாசிகள் திருத்தந்தையின் திருப்பலியில் கலந்து கொள்வதற்கு
ஆர்வமுடனும் பக்தியுடனும் அமர்ந்திருந்தனர். திறந்த காரில் இங்கு வந்த திருத்தந்தை, கைக்குழந்தைகளை
முத்தமிட்டு ஆசீர்வதித்தார். திருப்பலியும் தொடங்கியது. இயேசுவில் நிலைத்திருக்க விசுவாசிகளுக்கு
அழைப்பு விடுத்து இத்திருப்பலியை நிறைவு செய்தார் திருத்தந்தை. பின்னர் பெர்லின் திருப்பீடத்
தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். இத்திருப்பயணத்தின் இரண்டாம் நாளாகிய
இவ்வெள்ளி காலை 9 மணியளவில் பெர்லின் திருப்பீடத் தூதரகத்தில் ஜெர்மனியிலுள்ள சுமார்
40 இலட்சம் முஸ்லீம்கள் சார்பாக வந்த அம்மதப் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தார். திருத்தந்தையுடன்
இடம் பெற்ற இச்சந்திப்பு குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்த முஸ்லீம் பிரதிநிதிகள்,
ஜெர்மன் சமுதாயத்தில் இசுலாம் ஓர் அங்கமாக இருக்கின்றது என்பது உறுதியாகத் தெரிகின்றது
என்றனர். இச்சந்திப்புக்குப் பின்னர் பெர்லினின் தெகெல் சர்வதேச விமான நிலையம் சென்று
எர்ஃபூர்ட் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். எர்ஃபூர்ட் புனித அன்னை மரியா பேராலயம்
சென்ற பின்னர், அகுஸ்தீனியன் துறவு சபையினர் வாழ்ந்த துறவு இல்லம் சென்றார். அங்கு எவாஞ்சலிக்கல்
கிறிஸ்தவ சபையின் 15 பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. அப்போது உள்ளூர் நேரம்
முற்பகல் 11.30 மணியாகும். மார்ட்டின் லூத்தர் 1517ம் ஆண்டில் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு
எதிராகப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இங்குதான் அகுஸ்தீனியன் சபைத் துறவியாக வாழ்ந்தார்.
இறையியல் பேராசிரியராகிய லூத்தர், இதற்கு அருகிலுள்ள Wittenberg ல் 95 அறிக்கைகளை எழுதி
ஒட்டினார். இந்த எதிர்ப்புப் போராட்டத்தால் அச்சமயத் திருத்தந்தையால் அவர் திருச்சபையிலிருந்து
விலக்கப்பட்டார். இதுவே லூத்தரன் கிறிஸ்தவ சபை உருவாகக் காரணமானது. அன்று லூத்தர் முழங்காலிட்டு
செபித்த இடத்தில் திருத்தந்தையும் செபித்தார். அச்சந்திப்பில் உரையாற்றிய எவாஞ்சலிக்கல்
போதகர் Schneider, இந்த இடம் எவ்வாறு மார்ட்டின் லூத்தர் அகுஸ்தீன் சபைத் துறவியாக வாழ்ந்தார்
என்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றார். அந்தத் துறவு இல்ல ஆலயத்தில் கிறிஸ்தவ
ஒன்றிப்பு வழிபாடும் நடைபெற்றது. சுமார் 300 பேர் பங்கு கொண்ட இவ்வழிபாட்டில் மறையுரையும்
ஆற்றினார் திருத்தந்தை. திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் கலந்து கொள்வதற்கென
சுமார் 500 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ள ஹெய்டி பிராங் என்ற 49 வயது மனிதர் சொல்கிறார்
– இவ்வழிபாடு எனது எதிர்பார்ப்புக்களையெல்லாம் விஞ்சிவிட்டது. இது மிகவும் அழகானது என்றார்.
பெர்லின் நகரின் 21 வயது ஜாக்குலின் சொல்கிறார் – முழு சமூகமும் செபித்தது. இதனை எல்லா
நாட்களிலும் பார்க்க முடியாது. இந்தச் சூழல் நேர்த்தியான அனுபவமாக இருந்தது என்று. இத்தகைய
நல்ல அனுபவங்கள் இனி வரும் நாட்களிலும் தொடரும் என நம்புவோம். இப்பயணத்தை நிறைவு செய்து
ஞாயிறு இரவு காஸ்தெல் கந்தோல்ஃபோ திரும்புவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்