2011-09-23 16:44:35

செப்டம்பர் 24 வாழ்ந்தவர் வழியில்.... கினி-பிசாவ் குடியரசு பிறப்பு


ஆப்ரிக்கக் கண்டத்திலுள்ள மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான கினி-பிசாவ் குடியரசு, முன்னாள் போர்த்துக்கீசியக் காலனியாகும். வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ள இந்நாடு, 1973ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி விடுதலை அடைந்தது. மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள இந்த நாடு, போர்த்துக்கீசிய-கினி என்ற பெயரில் விடுதலைக்கு முன்னர் அழைக்கப்பட்டது. ஆனால் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க, இந்நாடு விடுதலையானவுடன், பிசாவ் என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவ் எனப் பெயர் மாற்றம் செய்தது. இது முன்னர் மாலி பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இங்கு சென்று கூலிகளைக் குடியமர்த்தினர். 1956ம் ஆண்டு, அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் புரட்சியாளர்கள் இங்கு தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, முன்னாள் சோவியத் யூனியன் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன் படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பயனாக விடுதலையை அறிவித்தனர். 1973ம் ஆண்டு நவம்பரில் ஐ.நா. இந்நாட்டை அங்கீகரித்தது. "ஒற்றுமை, போராட்டம், முன்னேற்றம்" என்பது கினி-பிசாவ் குடியரசின் விருது வாக்காகும்.







All the contents on this site are copyrighted ©.