2011-09-22 16:59:18

திருத்தந்தை : ஜெர்மனியில் கடவுளைப் பற்றிப் பேச வந்துள்ளேன்


செப்.22,2011. ஜெர்மன் நாட்டு Bellevue அரசுத் தலைவர் மாளிகையில் தனக்குக் கொடுக்கப்பட்ட இனிய வரவேற்புக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து அந்நாட்டுக்கான தனது முதல் உரையைத் தொடங்கினார் திருத்தந்தை ஜெர்மன் நாட்டுக்கானத் திருப்பயணம் திருப்பீடத்திற்கும் ஜெர்மன் கூட்டுக் குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வப் பயணமாக அமைந்தாலும், பிற நாடுகளின் தலைவர்கள் செய்வது போல, குறிப்பிட்ட அரசியல் அல்லது பொருளாதார இலக்குகளை அடையும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, இப்பயணம் மக்களைச் சந்திக்கவும் கடவுள் பற்றிப் பேசவுமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. சமுதாயத்தில் மதத்திற்குப் பாராமுகம் காட்டப்படுவது வளர்ந்து வருவதைக் காண முடிகின்றது. வெற்றிகரமான சமூக வாழ்வுக்கான அடித்தளங்களில் மதமும் ஒன்று. “மதத்திற்குச் சுதந்திரம் தேவைப்படுவது போல, சுதந்திரத்திற்கு மதம் தேவைப்படுகின்றது”. மாபெரும் ஆயரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான Wilhelm Von Ketteler என்பவரின் வார்த்தைகள் இவை. சுதந்திரத்தை உறவுகளின்றி வாழ முடியாது. ஒன்றிணைந்த மனித வாழ்க்கையில் ஒருமைப்பாடு இல்லாமல் சுதந்திரம் இயலாததாகும். பிறரை வருத்தும் நிலையில் ஒருவர் என்ன செய்தாலும் அது சுதந்திரமாகாது. ஆனால் அது பிறரையும் தன்னையும் வருத்துகின்ற குற்றச் செயலாகும். ஒருவர் தனது சொந்த சக்தியைப் பயன்படுத்துவது, பிறரின் நலனில் அக்கறை காட்டுவது ஆகியவற்றால் மட்டுமே ஒருவர் தன்னை உண்மையிலேயே சுதந்திர ஆளாக வளர்த்துக் கொள்ள முடியும். இது தனிப்பட்டவரின் விவகாரங்களில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாய விவகாரங்களிலும் உண்மையாகும். இந்தக் கோட்பாட்டுக்கு ஒத்திணங்கும் வகையில் ஒரு சமுதாயம் சிறிய அமைப்புகள் வளருவதற்கு போதுமான இடம் ஒதுக்க வேண்டும். அதேசமயம் அவற்றுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதன்மூலம் அவை ஒருநாள் தன் காலிலே நிற்க முடியும். ஜெர்மன் கூட்டுக் குடியரசின் இன்றைய நிலையை உருவாக்கியவர்களுக்கு நன்றி. இதற்கு ஆழமான கலாச்சாரப் புதுப்பித்தலும் நல்லதோர் எதிர்காலத்தைக் கட்டுவதற்கான அடிப்படை விழுமியங்களை மீண்டும் கண்டுணர்வதும் தேவைப்படுகின்றன. இந்நாட்டிற்கு எனது இப்பயணம் சிறிய அளவில் உதவும் என நம்புகிறேன் என்றார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.