2011-09-21 15:25:56

செப்டம்பர் 22-25, ஜெர்மனியில் திருத்தந்தை


செப்.21,2011. எதிர்காலத்தைப் பற்றிப் பயப்படுவோர் திருத்தந்தையின் ஜெர்மனிக்கானத் திருப்பயண நிகழ்வுகளைக் காண வேண்டும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு திருத்தந்தை தொடங்கும் ஜெர்மனிக்கான நான்கு நாட்கள் திருப்பயணத்தில் மனித வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்கானப் பதில்களை அவர் பரிந்துரைப்பார் என்று அருள்தந்தை லொம்பார்தி மேலும் கூறினார்.
"Octava Dies" என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருத்தந்தையின் இந்த ஜெர்மனிக்கானத் திருப்பயணம் பற்றிப் பேசிய அவர், "எங்கே கடவுள் இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கின்றது" என்ற இத்திருப்பயணத்தின் விருதுவாக்கையும் சுட்டிக் காட்டினார்.
வருகிற ஞாயிறு வரை நடை பெறும் இத்திருப்பயணம் திருத்தந்தை ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் மூன்றாவது திருப்பயணமாக அமைந்தாலும், இது அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ விருந்தாளியாக அவர் மேற்கொள்ளும் முதற்பயணமாகும்.
இவ்வியாழன் காலை 10.30 மணிக்கு பெர்லின் சர்வதேச விமானநிலையம் செல்லும் திருத்தந்தை விமானநிலைய வரவேற்பில் கலந்து கொள்வார். பின்னர் ஜெர்மன் அரசுத் தலைவர் கிறிஸ்டியான் வூல்ஃப், பிரதமர் ஆஞ்சலா மெர்க்கெல் ஆகியோரைச் சந்திப்பார். மாலையில் நாடாளுமன்றம் சென்று உரையாற்றுவார்.
இந்த நான்கு நாட்கள் திருப்பயணத்தில் பெர்லின், எர்ஃபூர்ட், ஃப்ரைபூர்க் ஆகிய மூன்று நகரங்களில் 17 உரைகள் நிகழ்த்துவார் திருத்தந்தை.
இப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு 8.45 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமானநிலையம் வந்து அங்கிருந்து காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.