2011-09-19 15:18:19

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய மக்களுக்கு அனுப்பிய வாழ்த்துத் தந்தி


செப்.19,2011. நாம் தனி மனிதராகவும், ஒரு சமுதாயத்தின் உறுப்பினராகவும் அர்த்தமுள்ள வகையில் வாழ்வதற்கு நற்செய்தியின் உண்மைகள் வழி நடக்க வேண்டுமென்றும், இவ்வழி நடக்கும்போது, நமது மனங்கள் உண்மையான விடுதலைப் பெறும் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய மக்களுக்குக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய அரசுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் முதல் ஆண்டு நினைவாக, அவ்வரசின் கத்தோலிக்கர்களுக்கு தன் மகிழ்வையும் வாழ்த்துக்களையும் ஒரு தந்தி மூலம் தெரிவித்த வேளையில், திருத்தந்தை இக்கருத்தையும் வெளியிட்டார்.
திருத்தந்தையின் பெயரால் இத்தந்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே, பேராயர் வின்சென்ட் நிக்கொல்ஸுக்கு இஞ்ஞாயிறன்று அனுப்பிவைத்தார்.
சென்ற ஆண்டு திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணத்தின் நினைவாக இலண்டன் Westminster பேராலயத்தில் கொண்டாடப்பட்ட நன்றித் திருப்பலியில் இந்தத் தந்தி வாசிக்கப்பட்டது.
பிரித்தானிய மக்கள் அனைவரையும் அருளாளர் ஜான் ஹென்றி நியூமன் அவர்களின் பரிந்துரைக்கும், பாதுகாப்பிற்கும் ஒப்புவிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அம்மக்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்குவதாக இத்தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.








All the contents on this site are copyrighted ©.