2011-09-19 15:19:35

சிங்கப்பூரில் மனித வர்த்தகத்தை முற்றிலும் ஒழிக்கும் முயற்சிகளில் புதிய அரசுத் தலைவர் ஈடுபட சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் விண்ணப்பம்


செப்.19,2011. மனித வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்கும் சிங்கப்பூரில் நிலவும் இக்கொடுமையை, அந்நாட்டின் புதிய அரசுத் தலைவர் முற்றிலும் ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டுமென்று சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த வாரம் நாட்டின் புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Tony Tan அவர்களின் மிக முக்கியமான நடவடிக்கையாக மனித வர்த்தகத்தை நிறுத்துவது அமைய வேண்டும் என்று சிங்கபூர் மறைமாவட்டத்தின் தொடர்புத்துறை இயக்குனர் Joan O’Reilly Fix, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
சிங்கப்பூர் சந்திக்கும் பல சமுதாயப் பிரச்சனைகளில் மனித வர்த்தகம் தலையாய ஒரு பிரச்சனை என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய O’Reilly, இப்பிரச்சனையைத் தீர்க்க புதிய அரசுத்தலைவர் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று உறுதி கூறினார்.
புதிய அடிமைத்தனமாக உருவெடுத்திருக்கும் இந்த மனித வர்த்தகத்தை கடினமான அரசு நடவடிக்கைகளே தீர்க்க முடியும் என்பதையும் O’Reilly எடுத்துக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.