2011-09-19 15:18:00

இருபது வடஇந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


செப்.19,2011. செறிவு நிறைந்த, பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், கிறிஸ்தவ பிரசன்னமும் 20 நூற்றாண்டுகளாக தழைத்து வந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி, இவ்வாண்டின் பல்வேறு மாதங்களில் உரோம் நகர் வந்திருந்த இந்திய ஆயர்களை குழுக்களாக திருத்தந்தை சந்தித்து வந்தார்.
இந்த சந்திப்புக்களின் இறுதி கட்டமாக, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் இத்திங்கள் காலை வடஇந்திய ஆயர்கள் இருபது பேரைச் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
திருச்சபையின் மூலதனம் நாம் கட்டும் கோவில்கள், பள்ளிகள், மற்றும் பிற கட்டிடங்களில் அமைவதில்லை மாறாக, விசுவாசத்தை நடைமுறை வாழ்வில் வெளிப்படுத்தும் மக்களே நமது மிக முக்கியமான மூலதனம் என்று திருத்தந்தை ஆயர்களிடம் எடுத்துரைத்தார்.
ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் மறைகல்வி புகட்டும் பலரும், இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரம், மொழி, இனம், ஆகிய எதார்த்தங்களை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருச்சபை என்றுமே ஏழைகளின் நண்பர் என்பதற்கு நாம் சாட்சிகளாய் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்தியாவுக்கு வந்த முதல் திருப்பயணத்தின் 25ம் ஆண்டு நினைவை பல வழிகளில் கொண்டாடிய இந்தியத் திருச்சபைக்கு தன் நன்றியை வெளிப்படுத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மதங்களுக்கிடையே இன்னும் ஆழமான உரையாடல்கள் நடைபெறுவதை அதிகம் விரும்பிய அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் விருப்பத்தை இந்தியத் திருச்சபை இன்னும் ஆர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இத்திங்கள் காலை இருபது வடஇந்திய ஆயர்களைச் சந்திப்பதற்கு முன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், போபால் பேராயர் லியோ கொர்னேலியோவையும், நேபாளத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பிரான்சிஸ் சர்மாவையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.