2011-09-16 16:14:44

செப் 17, 2011. வாழ்ந்தவர் வழியில் .... தந்தை பெரியார்


1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஈரோட்டில் பிறந்தார் ஈ.வெ.ரா. பெரியார். சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
1929ல் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின் வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்கு பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார் பெரியார். 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டபோது, காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டதுமட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை அடியொடு ஒழித்தார்.
அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் 1925ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் சாதி எதிர்ப்பு போராட்டத்தை காந்திய வழியில் நடத்தி வெற்றியும் கண்டதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியதுடன், கலப்புத் திருமணமுறையையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தினார்.
கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தை திருமணத்தையும் தடை செய்ய போராடினார்.
சமூக சீர்திருத்தவாதியான ஈ.வெ.ரா. பெரியார், 1973ம் ஆண்டு டிசம்பர் 24ல் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.