2011-09-15 15:32:14

வாழ்ந்தவர் வழியில் ... செப்டம்பர் 16 ..... எம். எஸ். சுப்புலட்சுமி


எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் சண்முகவடிவு சுப்புலட்சுமி 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் அவர்களை 1940ம் ஆண்டு மணந்தார். புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாகிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காளி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ள இவா, 1945-ல் நடித்த பக்த மீரா படம் மிகவும் புகழ்பெற்றது. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட இந்தியாவில் வெளியான போது இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகிய அரசியல் பிரமுகர்கள் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்குக் கிடைத்தது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு "இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனக் பாராட்டியதாக அறிகிறோம். "இந்தியா இந்தத் தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறியுள்ளார். எம். எஸ். சுப்புலட்சுமி உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். 1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொள்ளவில்லை. பத்ம பூசண்(1954), சங்கீத கலாநிதி (1968), ரமோன் மகசேசே விருது (1974), பத்ம விபூசண் (1975), காளிதாச சன்மான் (1988), நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது (1990), பாரத ரத்னா (1998) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். எம். எஸ். சுப்புலட்சுமி 2004, டிசம்பர் 11ல் காலமானார்







All the contents on this site are copyrighted ©.