2011-09-15 15:29:31

வருகிற அக்டோபர் 31ம் தேதி உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும்


செப்.15,2011. விரைவில் நமது உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் என்றும் இந்த மைல்கல்லை உலகம் அடையும் வேளையில், உலக அரசுகள் ஒன்று கூடி வந்து, இந்த சவாலைச் சந்திக்க வேண்டும் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
வல்லுனர்களின் கணிப்பின்படி வருகிற அக்டோபர் மாதம் இவ்வுலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டிய பான் கி மூன், ‘700 கோடி செயல்பாடுகள்’ என்ற திட்டத்தை இப்புதனன்று நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்து வைத்தார்.
தேவைக்கும் அதிகமாக உணவு உற்பத்தியில் உலகம் வளர்ந்திருந்தாலும், உலகில் பசியாலும், பட்டினியாலும் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என்பது நம் உலகின் முரண்பாடுகளில் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன்,
700 கோடியைத் தாண்டிப் பிறக்கும் முதல் குழந்தை முரண்பாடுகள் அதிகமாகி வரும் இதுபோன்ற ஓர் உலகைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.
உலக அரசுகளும், அரசு சாரா அமைப்புக்கள் இன்னும் பிற நிறுவனங்கள் அனைத்தும் மக்கள் மீது தங்கள் முதலீடுகளை செலவழித்தால், தகுந்த பயன்களை மனித சமுதாயம் உறுதியாகப் பெறும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார் ஐ.நா.பொதுச் செயலர்.
ஐ.நா. அண்மையில் வெளியிட்ட உலக மக்கள்தொகை கணக்கின்படி, அக்டோபர் 31ம் தேதி உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் என்றும், இதே அளவில் மக்கள்தொகை அதிகரித்து வந்தால், 2050ம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 900 கோடியையும், 21ம் நூற்றாண்டு முடிவடைவதற்குள் உலக மக்கள்தொகை 1001 கோடியையும் தாண்டும் என்று கூறப்பட்டுள்ளது.









All the contents on this site are copyrighted ©.