2011-09-15 15:28:09

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


செப்.15,2011. ஆயர்கள் தனி மனிதர்கள் அல்ல, மாறாக, நமது ஆன்மாக்களின் மேய்ப்பரும், ஆயருமான கிறிஸ்துவுடன் இணைந்துள்ள ஓர் அங்கம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆயர்கள் உரோமையில் உள்ள புனித பேதுருவின் கல்லறைக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் பழக்கத்தின்படி, உரோம் நகர் வந்துள்ள புதிய ஆயர்களை திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் இவ்வியாழனன்று சந்தித்தத் திருத்தந்தை அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
இலத்தீன் ரீதி, மற்றும் கீழை ரீதி ஆயர்களை, சிறப்பான முறையில் வாழ்த்துவதாகக் கூறியத் திருத்தந்தை, மத்தியக் கிழக்குப் பகுதியில் பலவித இன்னல்களைத் தாங்கி வரும் மக்களை தான் சிறப்பான முறையில் நினைவு கூர்வதாகக் கூறினார்.
குருத்துவம் என்ற அருள்சாதனத்தின் முழு நிறைவை வழங்கும் ஆயர் நிலையானது, திருச்சபை என்னும் குடும்பத்திற்கு சேவை செய்வதற்கென உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை புதிய ஆயர்களுக்கு சுட்டிக்காட்டினார்.
தூய ஆவியானவர் வழங்கும் கொடைகள் அனைத்தும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், இந்தக் கொடைகளை மக்கள் இன்னும் அதிகமாகப் பெறுவதற்கு ஆயர்கள் ஆவன செய்யவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
கண்ணால் காணக்கூடிய தலத்திருச்சபையின் ஒற்றுமைக்கு ஒவ்வோர் ஆயரும் ஓர் அடையாளமாய் இருந்து, தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை ஒற்றுமையிலும், ஒப்புரவிலும் வளர்ப்பது ஆயர்களின் தலையாயக் கடமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்துரைத்தபின், அங்கு கூடியிருந்த அனைத்து புதிய ஆயர்களுக்கும் தன் உரையின் இறுதியில், சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.