2011-09-15 15:28:32

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி வழங்கிய உரை


செப்.15,2011. மனித வர்த்தகம், முக்கியமாக, பெண்களையும் குழந்தைகளையும் வர்த்தகம் செய்யும் புதிய அடிமை வர்த்தகம் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறதென்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வில் இச்செவ்வாயன்று, ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணிபுரியும் பேராயர் சில்வானோ தொமாசி, உலகில் இன்று நடைபெறும் புதிய அடிமை வர்த்தகத்தால் ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று எடுத்துக் கூறினார்.
மிகக் கடினமானச் சூழலில் பெண்களும், குழந்தைகளும் அயல்நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்வதைப் பற்றிக் கூறிய பேராயர் தொமாசி, இந்த நவீன அடிமைகளின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்கள் இவர்களை விலைகொடுத்து வாங்கும் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்வதால் எழும் பல துயரங்களையும் தன் உரையில் குறிப்பிட்டார்.
இக்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை உலக நாடுகள் உருவாக்கியிருந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கொடுமை பல்வேறு புதிய வடிவங்கள் பெற்றுவருவதையும் பேராயர் எடுத்துரைத்தார்.
இந்தப் பிரச்னையை வேரோடு களைய ஒவ்வோர் அரசும் மிகக் கடினமான சட்டங்களையும், வழிமுறைகளையும் கண்டுபிடிப்பது நம் அனைவரின் மனசாட்சிக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்று ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணிபுரியும் பேராயர் சில்வானோ தொமாசி வலியுறுத்திக் கூறினார்.
இத்திங்களன்று ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வு, இம்மாதம் இறுதிவரை நடைபெறும் என்று செய்திகள் கூறுகின்றன.









All the contents on this site are copyrighted ©.