2011-09-15 15:29:18

இந்தியாவின் சில மாநிலங்களில் மதச் சிறுபான்மையினருக்கு சரியான பாதுகாப்பு இல்லை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிக்கை


செப்.15,2011. மதச் சுதந்திரம் என்பது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமை என்று கூறப்பட்டாலும், அந்நாட்டின் ஒரு சில மாநிலங்களில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளை நீக்குவதற்கு அம்மாநில அரசுகள் சரிவரச் செயல்படவில்லை என்று அமெரிக்க ஐக்கிய நாடு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
2010ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அகில உலகில் நிலவிய மதச் சுதந்திரம் பற்றிய ஓர் அறிக்கையை இச்செவ்வாயன்று அமெரிக்க அரசுச் செயலரான Hillary Clinton வெளியிட்டார்.
உலகின் பல அரசுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு சமய உரிமைகளை மறுத்து, அவர்களை சமய அடிப்படையில் வதைத்து வருவது இவ்வறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமயம் சார்ந்த வன்முறைகள் நிகழ்கின்றன என்பதை உறுதி செய்துள்ள இவ்வறிக்கையில், அந்நாட்டில் சரியான பயிற்சிகள் பெறாத காவல் துறையினரின் சக்தியற்ற செயல்பாடும், நீதித் துறை மிகவும் தாமதமாகச் செயல்படுவதும் இந்த வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 198 நாடுகளின் சமயம் சார்ந்த உரிமைகள் குறித்து விவரங்களை வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், மியான்மார், சீனா, ஈரான், வடகொரியா, சவூதி அரேபியா, சூடான் ஆகிய நாடுகள் கவலைக்குரிய போக்கில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.