2011-09-14 15:39:43

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


செப்.14,2011. காஸ்தெல்கந்தோல்ஃபோ கோடைகாலத் தங்கும் இல்லத்திலிருந்து இப்புதன் காலை ஹெலிகாப்டரில் வத்திக்கான் வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் அமர்ந்திருந்த சுமார் எட்டாயிரம், ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகளின் பயணிகளுக்குப் பல மொழிகளில் புதன் பொது மறைபோதகம் வழங்கினார். இதில் திருப்பாடல் 22, இன்னும், செப்டம்பர் 14, 15 ஆகிய தினங்களின் திருவழிபாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறப்பாக, இளையோர், நோயாளிகள் மற்றும் புதிதாகத் திருமணமானவர்களை வாழ்த்திய போது இப்புதனன்று திருச்சிலுவையின் பேருண்மையையும் இவ்வியாழனன்று அன்னைமரியின் துயரங்களையும் தியானிப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் என்றார் RealAudioMP3 . அன்பு இளையோரே, கிறிஸ்துவின் திருச்சிலுவையும் வியாகுல அன்னையின் எடுத்துக்காட்டும் உங்களது வாழ்வை ஒளிர்விப்பதாக. அன்பு நோயாளிகளே, உங்களது அன்றாட வேதனைகளைத் தாங்கிக் கொள்ளவும், திருமணத் தம்பதியரே, உங்களது குடும்ப வாழ்க்கையைத் தைரியத்துடன் தொடங்கவும் திருச்சிலுவையும் வியாகுல அன்னையும் உதவுவார்களாக என்றார். மேலும், கடவுளால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவர் துயரத்தோடு புலம்புவதைத் திருப்பாடல் 22ல் தியானிக்கிறோம் என ஆங்கில மொழியில் அப்பாடல் பற்றிச் சுருக்கமாக விளக்கினார் திருத்தந்தை. RealAudioMP3
தன்னை நசுக்கும் எதிரிகளால் சூழப்பட்ட இத்திருப்பாடல் ஆசிரியர், இரவும் பகலும் உதவிக்காக இறைவனிடம் தேம்பித் தேம்பி அழுகிறார். எனினும், இறைவன் மௌனமாக இருப்பது போலத் தெரிகிறது. இந்தத் திருப்பாடலின் தொடக்க வரிகளான “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதை இயேசு சிலுவையிலிருந்து தமது தந்தையை அழைத்த வார்த்தைகளாக மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் குறிக்கப்பட்டுள்ளன. இயேசுவின் எதிரிகள் அவரைக் கேலி செய்யும் போதும், கடும்பசியோடு சீறி முழங்கும் கொடும் சிங்கங்கள் போன்று அவரைத் தாக்கும் போதும், அவர் ஏற்கனவே இறந்தது போல அவரது ஆடையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட போதும், இயேசு கொடூரமான நிலையில் தான் கைவிடப்பட்டது போன்று உணர்ந்தார். கடந்த காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் துயரங்களின் போது எவ்வாறு நம்பிக்கையோடு ஆண்டவரை அழைத்தனர் என்பதையும் ஆண்டவரும் அவர்களின் செபத்திற்கு எவ்வாறு பதில் அளித்தார் என்பதையும் இத்திருப்பாடல் ஆசிரியர் நினைவுகூருகிறார். சிசுவாகத், தனது தாயின் கருப்பையில் இருந்தது, குழந்தையாகத் தனது தாயின் கரங்களில் இருந்தது எனத் தனது இளமைக் காலத்தில் ஆண்டவர் எவ்வாறு தன்னைக் கனிவோடு பராமரித்தார் என்பதையும் இந்த ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். அதேசமயம், தனது பகைவர்களின் இத்தகைய கெடுபிடிச் சூழல்களிலும், இந்த ஆசிரியர் ஆண்டவரில் வைத்துள்ள நம்பிக்கையும் விசுவாசமும் அப்படியே இருக்கின்றன. கடவுளது பெயர் எல்லா நாடுகளின் முன்பாக வாழ்த்தப்படுவதாக என்ற நம்பிக்கைக் குறிப்போடு இத்திருப்பாடல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. திருச்சிலுவையின் நிழல், உயிர்ப்பின் ஒளிமயமான நம்பிக்கைக்கு வழி திறக்கின்றது. நாமும் நமது துன்பநேரங்களில் இறைவனைக் கூப்பிடும் போது நமது நம்பிக்கையை அவர் மீது வைக்க வேண்டும். அவரே மீட்பைக் கொணருபவர், நித்திய வாழ்வெனும் கொடையோடு மரணத்தை வெல்கிறவர் அவரே.
இவ்வாறு தனது புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.