2011-09-13 15:06:03

9/11 தாக்குதல்களின்போது சேவைகள் செய்து உயிரிழந்தவர்கள் இருள் சூழ்ந்த உலகின் ஒளிவிளக்குகள் - திருப்பீடப் பேச்சாளர்


செப்.13,2011. 9/11 தாக்குதல்களின்போது உடனடியாக தங்கள் சேவைகளைத் துவங்கி, அதனால் தங்கள் உயிர்களை இழந்தவர்கள் அந்த இருள் சூழ்ந்த நாளின் ஒளிவிளக்குகளாய் திகழ்கின்றனர் என்று வத்திக்கான் சார்பில் பேசிய இயேசுசபை அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அன்று நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவையொட்டி, தன் கருத்துக்களை வத்திக்கான் வானொலியில் கூறிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
நியூயார்க், வாஷிங்க்டன் ஆகிய நகரங்களில் நடந்த இத்தாக்குதல்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் மட்டுமல்ல இன்னும் மற்ற 70 நாடுகளைச் சார்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டிய அருள்தந்தை லொம்பார்தி, ஆபத்தில் சிக்கியவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பியோட முனைந்தபோது, வேறு பலர் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற உந்துதலால் ஆபத்தை நோக்கி விரைந்துச் சென்றனர் என்று கூறினார்.
தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருந்தும், பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்று விரைந்த தீயணைப்புப் படையினர், இன்னும் மற்றவர்கள் மனித வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் ஒளிவிளக்குகள் என்று திருப்பீட பேச்சாளர் கூறினார்.
9/11 தாக்குதல்களில் உடனடியாக சேவைகளில் இறங்கிய 343 தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட 400க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
அமைதியும் வளர்ச்சியும் பெருகும் என்ற நம்பிக்கையுடன் நாம் ஆரம்பித்த 21ம் நூற்றாண்டு வன்முறையில் துவங்கியது என்பதைக் கூறிய அருள்தந்தை லொம்பார்தி, இந்தத் தாக்குதலுக்குப் பின் பத்தாண்டுகள் கழித்து ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகும் வன்முறைகள் உலகில் குறைந்ததாகத் தெரியவில்லை என்ற தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையற்றச் சூழலில், உயிர்களைக் காக்கும் பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் மனிதர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்வது நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.