செப்.12, 2011. ஒன்பது, பதினொன்று. வரலாற்றில் ஒருபோதும் மறக்க முடியாத எண்கள். இந்த
ஞாயிற்றுக்கிழமை உலகின் சமயத் தலைவர்கள், பல அனைத்துலக நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள்,
நாடுகளின் தலைவர்கள், ஏன் பாமரக் குடிமக்கள் எனப் பலரிடம் ஒலித்த எண்கள் இவை. திருத்தந்தை
16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நண்பகலில் இத்தாலி நாட்டு அங்கோனா என்ற நகரில் ஒரு இலட்சத்துக்கு
மேற்பட்ட விசுவாசிகளிடம் இந்த ஒன்பது, பதினொன்று ஆகிய எண்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
"பத்து ஆண்டுகளுக்கு
முன்னர் செப்டம்பர் 11ம் தேதி நடந்த நிகழ்வை முன்னிட்டு நாடுகளின் தலைவர்களுக்கும் நன்மனது
கொண்ட எல்லாருக்கும் இந்த அழைப்பை முன்வைக்கிறேன். பிரச்சனைகளுக்குரிய தீர்வாக வன்முறையைக்
கையாளுவதை எப்போதும் புறக்கணியுங்கள். காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் சோதனையை எதிர்த்து
நில்லுங்கள். ஒருமைப்பாடு, நீதி, அமைதி ஆகிய கோட்பாடுகளால் தூண்டப்பட்ட சமுதாயத்தில்
பணி செய்யுங்கள்". கடந்தவார டில்லி உயர்நீதிமன்றக் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நினைவில்
வைத்து, டில்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு அவைக் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங், "இந்தியா போன்ற நாடுகளில் எதிர்மறைக் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கு
என, நிறைய அமைப்புகளும், வழிகளும் உள்ளன. பயங்கரவாதம் எனும் கோரமான அனுபவத்திற்கு, திரும்பத்
திரும்ப இந்த நாடு உட்படுவது வேதனையளிக்கிறது. பயங்கரவாதமும், நக்சலிசமும் நாட்டிற்கு
மிக முக்கிய சவால்களாக உள்ளன. சித்தாந்தத்தின் பேரில், அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதை
எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது'' . பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள்
எதுவாக இருந்தாலும், அதை முழுமூச்சோடு எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என்று தலைவர்கள்
சொல்லிக் கொண்டேயிருக்க, பரமக்குடியில் இஞ்ஞாயிறன்று காவல்துறைக்கும், ஒரு தரப்பினருக்கும்
இடையே வெடித்த மோதலில் காவல்துறை வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. ஆறு பேர் பலியாயினர்.
பதட்டநிலையும் தொடருகின்றது. எண்கள் ஒன்பது, பதினொன்று. அதாவது அந்தச் செப்டம்பர்
11ம் தேதி காலை 8.46 மணிக்கு நியுயார்க் உலக வர்த்தக இரட்டைக் கோபுரத்தின் வடக்குக் கட்டிடத்தை
விமானம் ஊடுருவிச் சென்றது. அமெரிக்கச் செல்வநிலையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்த
இதன் தெற்குக் கட்டிடத்தை அடுத்த 17 நிமிடங்களில் (9.03) மற்றொரு விமானம் ஊடுருவியது.
இரண்டும் தரைமட்டமாக்கப்பட்டன. எந்தக் கோலியாத்தாலும் அணுக முடியாத அமெரிக்க இராணுவக்
கோட்டையாகிய பென்டகன் மீது மூன்றாவது விமானம் மோதியது. நான்காவது விமானத்தில் கடத்தல்காரர்களுக்கும்,
பயணிகளுக்கும் இடையே சண்டை நடந்ததால் முடிவில் விமானம் விபத்துக்குள்ளாகி பென்சில்வேனியா
வயல் ஒன்றில் தீப்பற்றி எரிந்தது. 19 தீவிரவாதிகள் ஈடுபட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில்
இந்தியா உட்பட 90க்கும் மேற்பட்ட நாடுகளின் 2,976 பேர் இறந்தனர். அல்-கெய்தா தீவிரவாத
அமைப்பின் இந்தக் காழ்ப்புணர்வுத் தாக்குதலுக்கு அமெரிக்க ஐக்கிய நாடும் பதிலடி நடவடிக்கையில்
இறங்கியது. இதற்கு மூளையாய் இருந்த செயல்பட்ட ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்காக அமெரிக்காவும்
நேட்டோ படையினரும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலைத் தொடங்கினர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக இடம்
பெற்று வரும் இத்தாக்குதலுக்காக அமெரிக்கா ஏறக்குறைய ஒரு இலட்சம் படைவீரர்களை ஆப்கானிஸ்தானில்
இறக்கியுள்ளது. அவர்களில் சுமார் 33 ஆயிரம் பேரை அடுத்த ஆண்டுக்குள் திரும்பி அழைக்கத்
திட்டமிட்டுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாயையும் செலவிட்டுள்ளது. இந்த ஆப்கான் மற்றும் ஈராக்
போர்களில் 6,200க்கு மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏன், இந்த
பத்தாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்ட போதுகூட ஆப்கானின் Wardak லுள்ள அமெரிக்க
இராணுவ மையத்தில் நடந்த வாகனத் தற்கொலை குண்டு வெடிப்பில் ஏறக்குறைய 80 அமெரிக்கப் படைவீரர்கள்
காயமடைந்துள்ளனர். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 உலகிற்கே ஒரு கறுப்பு நாள். அந்நாளில்
இறந்தவர்களை நினைத்து அமெரிக்க ஐக்கிய நாட்டு இந்நாள், முன்னாள் தலைவர்களும் பொது மக்களும்
கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர், கடவுளே நமது புகலிடம், அவரே நமது பலம், அவரே நம்மைக் காப்பவர்
என்று அதிபர் ஒபாமா செபித்தார். “வன்முறை, பிரச்சனைகளுக்கு ஒருபோதும் தீர்வைச் சொல்லாது”.
ஆனால் நாடுகளில் குண்டுகளுக்கு மட்டும் பஞ்சம் ஏற்படுவதே இல்லை. அதேசமயம் இந்த செப்டம்பர்
11, இரட்டைக் கோபுரப் பயங்கரவாதத் தாக்குதல், பலரது வாழ்க்கையில் நல்மாற்றத்தைக் கொண்டு
வந்திருப்பதாக, புதிய உறவுகளுக்கு வழி அமைத்திருப்பதாக அறிகிறோம். இதில் Salman என்ற
இளம் மகனைப் பறி கொடுத்த முஸ்லீம் தாய் Talat Hamdani சொல்கிறார் : “எனது மகன் சல்மானை
முஸ்லீம் என்று சொல்லி அவனது வகுப்புத் தோழர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஆனால்
அவன், இந்தத் தாக்குதலில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றான். அவன் திரும்பி வரவே
இல்லை. ஒருவருக்கு அநீதி செய்யப்படுகிறதா, அவர் அதற்கு எதிராகப் பேச வேண்டும்” Artie
Van Why என்ற நடிகர், அந்த 73 நிமிடங்கள் தனது வாழ்க்கையை துவைத்துப் போட்டு முற்றிலும்
மாற்றி இருப்பதாகக் கூறுகிறார். “செப்டம்பரில் அந்த நாள்” என்ற தலைப்பில் இவர் தனது அனுபவங்களையும்
எழுதியுள்ளார். “மனிதர்கள் உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். மனிதரின் மரண ஓலங்கள்
கேட்டன. வெள்ளைத்தாள்கள் பனிபோல் பறந்து வந்து தரையை நிரப்பின. கட்டிடத் துகிள்கள் மழைபோல்
கொட்டின. இந்தக் காட்சியைக் கண்ட போது, கடவுளே எங்கள் எல்லாரையும் காப்பாற்றும் என்று
என்னையும் அறியாமல் கத்தினேன். இதற்குப் பின்னர் இருள் என்றாலே எனக்குப் பயம். தொலைக்காட்சியைப்
பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். எனது பெற்றோருடன் நல்ல உறவின்றி இருந்த நான் தினமும்
பெற்றோரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். நான் இப்போது எனது ஐம்பதுகளில் இருந்தாலும்
எனக்கு அம்மா, அப்பாவும் குடும்பத்தின் பாதுகாப்பும் தேவை என உணருகிறேன். 2001, செப்டம்பர்
10ம் தேதி இருந்த நான், செப்டம்பர் 11ம் தேதி வித்தியாசமான ஆளாக மாறியிருந்தேன். அந்த
இரட்டைக் கோபுரக் கட்டிடங்கள் தீயில் கருகிச் சரியும் போது மனிதன் இதைவிடக் கொடுமையானது
செய்ய முடியுமா, மனிதனில் இவ்வளவு வெறுப்பு இருக்குமா எனச் சிந்தித்தேன். அதேசமயம் அந்நேரத்தில்
மனிதனின் நன்மைத்தனத்தையும் தைரியத்தையும் கண்டேன். எத்தனைபேர் தங்கள் உயிரைப் பணயம்
வைத்து அக்கட்டிடத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றார்கள். ஒருவர் ஒருவரைத் தங்கள்
கரங்களில் தாங்கி அணைத்துச் சென்றார்கள். இந்த வீரதீரச் செயல்களைச் செய்தவர்களில் கடவுள்
இருந்தார், அவர்களின் கரங்களில் கடவுள் இருந்தார். இந்தக் கொடூரச் சம்பவத்தை நேரிலும்
தொலைக்காட்சியிலும் கண்டு கருணையால் நிரம்பிய மனிதரின் இதயங்களில் கடவுள் இருந்தார் என்று
நம்புகிறேன்” இப்படித் துன்பங்களும் வேதனைகளும் நோய்களும் பலரது வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன.
நிலையில்லாத வாழ்க்கை பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. ‘‘ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை
நேரும்; இந்த நோயினால் நீங்கள் அடைந்த நன்மையென்ன?’’ என்று கவிஞர் வைரமுத்து நடிகர் ரஜினியிடம்
கேட்ட போது, அவர், ‘‘மனைவி மக்களின் அன்பை அனுபவித்தேன். இரசிகர்கள் என் மீது வைத்திருக்கும்
பேரன்பின் பெருக்கத்தை அறிந்துகொண்டேன். இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வை மறுபரிசீலனை செய்கிறேன்’’
என்று சொன்னதாக வாசித்தோம். கிழக்கு ராஜா அண்ணாமலைபுரம் ரோட்டரி கிளப்பினர், சென்னை
அரசு மருத்துவமனையிலுள்ள ஆதரவற்ற பிணங்களைப் பெற்று நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்த
அமைப்பினர் அண்மையில் 40 பிணங்களை அடக்கம் செய்திருக்கின்றனர். “இறுதி யாத்திரை” என்ற
பெயரில் இவர்கள் செய்யும் இச்சேவை பற்றி அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் பத்திரிகை ஒன்றில்
இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்..... "ஒரு நாள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச்
சென்றிருந்தோம். வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், அவர்களுடைய தந்தையை அங்கு
அனுமதித்திருந்தனர். நாங்கள் அங்கு இருந்த போது அவர்களுடைய தந்தை இறந்துவிட்டார். தந்தையின்
மரணத்திற்காக கண்ணீர்விட முடிந்த அவர்களால், அவருடைய பிணத்தைக் கொண்டு செல்லப் பணம் இல்லை.
அந்தச் சம்பவம், எங்கள் அடிமனதில் பெரும் காயமாக வந்து விழுந்தது. நாங்கள் ரோட்டரி கிளப்பில்
பொறுப்புக்கு வந்த பிறகு, நம்மால் முடிந்த அளவிற்கு, ஆதரவற்ற பிணங்களுக்கு ஏதாவது செய்ய
வேண்டும் என்று முடிவெடுத்த போது உதித்தது தான் இந்த “இறுதி யாத்திரை” திட்டம். வெள்ளைச்சட்டை
போட்டுக் கொண்டு ஏன் வெட்டியான் வேலை பார்க்கிறீர்கள் என்று, இன்று வரை எங்கள் மீது பெரிய
அளவில் முகச்சுளிப்பு இருக்கிறது. இருந்தாலும், நாங்கள் செய்கிற வேலை எங்கள் மனதிற்கு
திருப்தியாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இதில் எத்தனை தடை
வந்தாலும், நாங்கள் நிறுத்தப் போவதில்லை. ஆதரவற்ற பிணங்களைப் புதைக்கிற போது, எங்களால்
அதன் அருகில் ஐந்து நிமிடம்கூட நிற்க முடியவில்லை. ஆனால் அங்கிருந்த வெட்டியான், முகம்
சுளிக்காமல் கடைசிவரைத் தன் பணியை சிறப்பாகச் செய்கிறார். இப்படிக் குறை சொல்பவர்களுக்குமுன்
ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள் வெட்டியான்கள்'' "ஒருவரின் சேவை மரணம் வரைக்கும் தொடரும்”
என்பார்கள். ஆனால் இங்கு மரணத்தில் இருந்துதான் சேவை தொடர்கிறது. மரணங்கள், எப்போதும்
அடுத்த மனிதர்கள் மீது கனிவையும், அன்பையும் வரவழைப்பவை. மரணங்கள் மற்றவரது வாழ்க்கையில்
மாற்றங்களை ஏற்படுத்துவன. ஒருவர் கேட்கிறார் – “நாடுகளை மாற்றினோம், நாடாளுமன்றங்களை
மாற்றினோம், நபர்களை மாற்றினோம், நாமங்களையும் மாற்றினோம், நம் நிலை மாறியதா? பறவைகள்
இயல்பை மாற்றவில்லை. விலங்குகள் இயற்கையை மாற்றவில்லை. தாவரங்கள் படைத்தவனை மாற்றவில்லை.
மனிதா! நாம் அனைத்தையும் மாற்றினோமே” என்று. அன்பர்களே, வரலாற்றில் ஒருபோதும் மறக்கவே
முடியாத ஒன்பதாம் மாதம் 11ம் நாள் நடந்தவை, பலரது வாழ்க்கையில் நல்மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
இத்தகைய நிகழ்வுகள் நம்மில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை, கருத்துக் கடிதங்கள் வழியாகப்
பகிர்ந்து கொள்வீர்களா?