2011-09-12 15:58:26

செல்வம் நிறைந்த சூழலில் வளர்ந்து வந்தாலும், தற்காலக் குழந்தைகள் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆஸ்திரேலிய அறிக்கை


செப்.12,2011. தற்காலக் குழந்தைகள் நலமான, செல்வம் நிறைந்த சூழலில் வளர்ந்து வந்தாலும், அவர்களில் பலர் கவலைதரும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆஸ்திரேலியாவில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
'குழந்தைகள் மற்றும் இளையோருக்கென்று ஆஸ்திரேலிய சமுதாயச் சூழலை சீரமைப்பது' என்ற தலைப்பில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் கடந்த வார இறுதியில் வெளியாயின.
சமுதாய முன்னேற்றம், கல்வி, பொருளாதார உறுதிப்பாடு ஆகிய பல்வேறு அம்சங்களில் ஆஸ்திரேலியா மேலான இடங்களை வகித்து வந்தாலும், குழந்தைகள் சந்திக்கும் பல ஆபத்தான பிரச்சனைகளுக்கு இச்சமுதாயம் சரியான கவனம் செலுத்தவில்லை என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மன நலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், தங்கள் சோகத்திலிருந்து மீள மருந்துகளை நாடும் குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மணமுறிவு செய்து கணவன், மனைவி ஆகியோர் பிரிந்து வாழும் குடும்பங்களே இந்த நிலைக்குப் பெரியதொரு காரணம் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.