2011-09-10 15:20:51

ஜாம்பியாவில் 58 விழுக்காட்டினருக்கு மட்டுமே போதுமான சுகாதார வசதி உள்ளது


செப்.10,2011. ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், மோசமான தண்ணீர் வடிகால் வசதி, கழிவறைகள் இல்லாமை ஆகியவற்றால் பல கிராம மக்கள் இரவுநேரத்தில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
தங்கள் வீடுகளுக்கு 200 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அப்பால் கழிவறைகள் இருப்பதால் அம்மக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
இந்நிலை குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த அந்நாட்டு ஆயர் Evans Chinyemba, தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
அரசு சில பகுதிகளில் கிணறுகளை வெட்டினாலும் அவை அந்தந்த மாநிலங்களில் எல்லாப் பகுதிகளுக்கும் போதுமானதாக இல்லையென்று ஆயர் கூறினார்.
2008ம் ஆண்டில் ஓர் அரசு-சாரா அமைப்பு நடத்திய ஆய்வி்ல், ஜாம்பிய மக்களில் 58 விழுக்காட்டினருக்கு மட்டுமே போதுமான சுகாதார வசதி உள்ளது எனவும், 13 விழுக்காட்டினருக்கு கழிவறை வசதிகளே இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
ஜாம்பியாவில் மலேரியாவால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இது அந்நாட்டில் இடம் பெறும் இறப்புக்களில் 23 விழுக்காடாகும்.







All the contents on this site are copyrighted ©.