2011-09-10 16:00:21

செப்டம்பர் 11, வாழ்ந்தவர் வழியில்... சுப்பிரமணிய பாரதி


2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் விமானத் தாக்குதல்களுக்கு உட்பட்டு, உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டு சாய்ந்தன. இத்துயர நிகழ்வின் பத்தாம் ஆண்டு நினைவு இன்று.
90 ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் 11ம் தேதி மற்றொரு மாபெரும் கோபுரம் தமிழகத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் சாய்ந்தது. மகாகவி என்று இன்று உலகெங்கும் புகழ்பெற்றுள்ள சுப்பிரமணிய பாரதி 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தன் 38வது வயதில் காலமானார்.
1882ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த குழந்தை “சுப்பையா” என்று அழைக்கப்பட்டார். தனது 11ம் வயதில், பள்ளியில் படித்து வரும்பொழுதே, கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - என்று ஒரு கவிஞனுக்கு இலக்கணம் சொன்ன பாரதி, அவ்விலக்கணத்தை வாழ்ந்து காட்டியவர்.
கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பாரதி, தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனைப் புகழ்ந்து, பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசவையால் வழங்கப்பட்டது.
சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவரான பாரதி, "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று தமிழின்மீது தான் கொண்த அளவுகடந்த அன்பை உலகறியப் பறைசாற்றினார். இவரது கவின்திறனால் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர்.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமுதாயச்சிற்பி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாரதியைப் பற்றிப் பேசும் எந்த முயற்சியும் ஒரு விளக்கைத் தூக்கிப் பிடித்து, சூரியனைக் காட்ட விழையும் முயற்சியாக இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.