2011-09-09 14:45:14

வெறுப்புணர்வைப் புறக்கணித்து பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதற்கு அமெரிக்கப் பேராயர் அழைப்பு


செப்.09,2011. வெறுப்புணர்வைப் புறக்கணித்து பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதற்கு உறுதி எடுத்துள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன் கூறியுள்ளார்.
நியுயார்க் உலக வர்த்தக இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பத்தாம் ஆண்டு நினைவையொட்டி செய்தி வெளியிட்ட பேராயர் டோலன், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்ற கொடும் நிகழ்வுகளை நினைவுகூரும் இவ்வேளையில், நாம் நம்மிடையே காணப்படும் வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நாட்டையும் உலகையும் புதுப்பிப்பதற்கான நமது கடமையில் ஒன்றிணைவோம் எனக் கேட்டுள்ளார்.
இப்பயங்கரவாதத் தாக்குதல் இடம் பெற்று பத்தாண்டுகள் ஆகிய பின்னரும், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களுக்கு மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவது நியாயப்படுத்தப்படுகின்றது, இன்னும், முஸ்லீம்கள் உட்பட எல்லா மதத்தினரையும் புகலிடம் தேடும் அகதிகளையும் ஏற்பதற்குக் கருத்துக் கோட்பாடுகள் இடம் கொடுக்கவில்லை என்ற கவலையும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் வேலையின்றி இருப்பது, போர்கள் மற்றும் பயங்கரவாதங்கள் முன்வைக்கும் ஆபத்துக்களைக் குடும்பங்கள் தொடர்ந்து எதிர்கொள்வது போன்ற சவால்களை எதிர்நோக்கும் நாம், செப்டம்பர் 11ம் தேதியின் உணர்வில் இச்சவால்களைச் சந்திப்பதற்கு ஒன்றிணைவோம் என்று பேராயர் டோலன் கேட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.