2011-09-09 14:50:26

வறுமை மற்றும் நோயை அகற்றுவதற்கு எழுத்தறிவின்மை இன்றியமையாதது - ஐ.நா.பொதுச் செயலர்


செப்.09,2011. இன்றைய உலகில் சுமார் ஏழு கோடிச் சிறார் உட்பட ஏறக்குறைய எண்பது கோடிப்பேர் எழுத வாசிக்கத் தெரியாமல் இருக்கும்வேளை, வறுமை, நோய் போன்ற சமூகத் தீமைகளைக் களைவதற்கான முயற்சிகளுக்கு எழுத்தறிவின்மை தடையாய் இருக்கின்றதென ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
செப்டம்பர் 8ம் தேதி அனைத்துலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், கல்வியறிவின்மை, நாடுகளின் உறுதியான தன்மைக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
“கல்வியறிவும் அமைதியும்” என்ற தலைப்பில் இவ்வாண்டில் கடைபிடிக்கப்பட்ட இத்தினம் பற்றிக் கூறிய பான் கி மூன், 2009ல், உலகிலிருந்த 79 கோடியே 30 இலட்சம் எழுத்தறிவில்லாத வயது வந்தோரில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள் என்றும், அதே ஆண்டில் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லக்கூடிய சுமார் 6 கோடியே 70 இலட்சம் சிறாரும் 7 கோடியே 20 இலட்சம் விடலைப் பருவத்தினரும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், பெனின், புர்க்கினா ஃபாசோ, சாட், எத்தியோப்பியா, காம்பியா, கினி, ஹெய்ட்டி, மாலி, நைஜர், செனெகல், சியேரா லியோன் ஆகிய 11 நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட வயது வந்தோர் கல்வியறிவில்லாதவர்கள் என்று யுனெஸ்கோ அறிவித்தது.
இந்தியாவில் தற்போது எழுத்தறிவு பெற்றவர்கள் சுமார் 70 விழுக்காடாகும். இந்நிலை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வந்தாலும் உலகில் அதிகமான எழுத்தறிவில்லாத மக்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.







All the contents on this site are copyrighted ©.