2011-09-09 14:47:27

பழங்குடியினர் பற்றிய இந்திய அரசின் ஆய்வு பயனளிக்குமா - தலத்திருச்சபையின் ஐயம்


செப்.09,2011. இந்தியாவில் பழங்குடியினரின் மக்கள் தொகை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவது குறித்து இந்திய அரசு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதைக் குறித்து தலத்திருச்சபை அதிகாரிகள் தங்கள் ஐயத்தை வெளியிட்டுள்ளனர்.
பழங்குடியினர் மத்தியில் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்களை அறிய அரசு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு வெறும் பேச்சாக, தாள்களில் பதியப்பட்ட எண்களாக மட்டுமே இருக்குமேயொழிய, இது அரசை செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்லுமா என்பது கேள்விக் குறியே என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பழங்குடியினர் அலுவலகச் செயலர் இயேசுசபை அருள்தந்தை ஸ்தனிஸ்லாஸ் திர்கி கூறினார்.
1996ம் ஆண்டு பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துக்களைக் குறித்து அரசு ஆய்வுகள் நடத்தின. ஆனால், அந்த ஆய்வின் பயனாக எந்த ஒரு செயல் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை திர்கி, தற்போது அரசு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வும் வெறும் காகிதங்களில் அடைபடும் விவரங்களாகவே மாறும் ஆபத்து உள்ளது என்று கூறினார்.
பழங்குடியினர், சமுதாயத்தின் மையத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் மத்தியில் அடிப்படை நலவாழ்வுப் பராமரிப்பு இல்லாததாலும் இவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதென்று பழங்குடியினர் மத்தியில் பணி புரியும் குழந்தைநல மருத்துவர் Cecil Khakha கூறினார்.







All the contents on this site are copyrighted ©.