2011-09-09 14:44:15

திருத்தந்தையுடன் பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதர் Baker சந்திப்பு


செப்.09,2011. வத்திக்கானும், பிரித்தானிய அரசும் 30 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதுப்பித்துக் கொண்ட அரசியல் உறவுகள் சிறப்பான முறையில் வளர்ந்து வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு தான் பிரித்தானிய அரசுக்கு மேற்கொண்ட பயணத்தால் உறவுகள் இன்னும் வலுப் பெற்றுள்ளன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதரான Nigel Marcus Bakerஐ திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கண்டோல்போவில் இவ்வெள்ளி காலை சந்தித்து, அவரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட திருத்தந்தை, அவரிடம் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
தான் பல ஆண்டுகளாக மதித்து வந்த கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் அவர்களை அருளாளராக உயர்த்தியதால் தன் தனிப்பட்ட ஆவல்களில் ஒன்று நிறைவேறியது என்று கூறிய திருத்தந்தை, அருளாளர் நியூமன் தன் எழுத்துக்களில் வழங்கியுள்ள கருத்துக்களை ஆழமாகச் சிந்தித்தால், நாம் இன்று எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார மற்றும் சமுதாயக் கேள்விகளுக்கு பதில்களைக் காணலாம் என்று கூறினார்.
அண்மையில் பிரித்தானிய அரசி அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டது இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாய் நிலவி வரும் பிரச்சனைகள் நிறைந்த உறவைச் சரி செய்யும் ஒரு முயற்சி என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உலகம் இன்று அதிகமாகத் தேடி வரும் நிலையான அமைதிக்கு இப்பயணம் ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது என்று கூறினார்.
இவ்வுலகைத் தாண்டிய நிரந்தர மதிப்பீடுகளின் அடிப்படையில் பிரித்தானிய அரசு தன் அரசியல் முடிவுகளை எடுக்க காட்டி வரும் முனைப்பு நம்பிக்கையைத் தருகிறது என்று கூறிய திருத்தந்தை, இளையோரைச் சரியான பாதையில் வழி நடத்தும் கல்வி, ஏழைகளுக்கும் சமுதாயத்தில் வலுவிழந்தோருக்கும் காட்டும் மதிப்பு ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் பிரித்தானிய அரசு தன் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அண்மையில் அந்நாடு சந்தித்தக் கலவரங்களிலிருந்து மீண்டும் அந்நாட்டை கட்டியெழுப்பிவரும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டனில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்று திருத்தந்தை பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதர் Bakerஇடம் உறுதி அளித்தார்.







All the contents on this site are copyrighted ©.