2011-09-08 15:46:17

வேளாங்கண்ணி மாதா பசிலிக்காப் பேராலயத்தின் நிறைவு விழா நிகழ்ச்சிகள்


செப்.08,2011. நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பசிலிக்காப் பேராலயத்தில் இப்புதன் இரவு நடந்த பெரிய தேர் பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகைக்கு அடுத்த வேளாங்கண்ணியில், ‘கீழை நாடுகளின் லூர்து’ என அழைக்கப்படும் ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி துவங்கியது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றப்பட்டு, மாலையில் மாதாவின் திருத்தேர் பவனி நடந்தன.
இரு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ள இப்பசிலிக்காப் பேராலயத்தின் மேல், கீழ் கோவில்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திருப்பலியும், மாலையில் செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் செபம், மறையுரை, திருநற்கருணை ஆசீர் என அனைத்து வழிபாடுகளும் நடந்து வந்தன.
முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இப்புதன் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20 அருட்பணியாளர்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இவ்வியாழன் மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, காலை 6 மணிக்கு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு பேராலய வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவுக்கு வந்தது.
இப்பெருவிழாவை முன்னிட்டு, நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், இவ்வியாழன் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.