2011-09-08 15:49:15

நியூயார்க் நகரில் உலக வர்த்தக கோபுரங்கள் தாக்கப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள்


செப்.08,2011. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டும், வாஷிங்கடனில் 'பென்டகன்' என்றழைக்கப்படும் இராணுவக் கோட்டையும் விமானங்களால் தாக்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிவடைகின்றன. இந்த பத்தாவது ஆண்டு நினைவை பல நிகழ்ச்சிகள் மூலம் அமெரிக்க மக்கள் கடைபிடிக்கவும், கொண்டாடவும் திட்டமிட்டுள்ளனர்.
செப்டம்பர் 10ம் தேதி, வருகிற சனிக்கிழமையன்று நியூயார்க் பெருநகரின் புனித பாட்ரிக் பேராலயத்தில் ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் திருப்பலியை நிறைவேற்றுவார். பேராயர் சுல்லிக்காட் இத்திருப்பலியை நிறைவேற்றுவதன் மூலம், அமெரிக்கக் கத்தோலிக்கக் குடும்பத்தின் மீது வத்திக்கான் கொண்டுள்ள ஆழ்ந்த ஒருமைப்பாடு விளங்குகிறது என்று இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் Jan Schmidt கூறினார்.
Baltimoreல் உள்ள விண்ணேற்பு மாதா பேராலயத்தில் ஞாயிறு நடைபெறும் திருப்பலியை பேராயர் எட்வின் ஓ'பிரையன் நிகழ்த்துவார் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த நாளையொட்டி, WCC எனப்படும் உலகச் சபைகளின் உயரவை செய்தியொன்று அனுப்பியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உயிரிழந்தோர், மற்றும் இத்தாக்குதலின் எதிரொலியாக ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உயிரிழந்தோர் ஆகிய அனைவரையும் நினைவு கூர்வதாகவும், உலகெங்கும் அமைதி காலாச்சாரத்தை வளர்க்கும்படியாகவும் இச்செய்தி அமைந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.