2011-09-08 15:42:07

திருத்தந்தை இந்திய ஆயர்களுக்கு வழங்கிய உரை


செப்.08,2011. மனுக்குலத்தின் மீது கடவுள் கொண்டுள்ள அன்புக்கு ஒரு வெளிப்படையான அடையாளமாகவும், பிறரன்புச் சேவைகளின் வெளிப்பாடாகவும் உள்ள பல கத்தோலிக்க நிறுவனங்களின் வழியாக இறைவன் இந்தியத் திருச்சபையை ஆசீர்வதித்திருக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் "ad Limina Apostolorum" என்ற சந்திப்பையொட்டி கடந்த சில நாட்களாக மும்பை, பெங்களூரு, நாக்பூர், காந்திநகர் மற்றும் கோவா டாமன் ஆகிய உயர்மறைமாவட்டங்களின் கீழ் அடங்கியுள்ள பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்களைத் தனித்தனியே சந்தித்து வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்விழாயன் காலை திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காச்தல் கந்தோல்போவில் இம்மறைமாவட்டங்களின் 23 ஆயர்களை ஒரு குழுவாகச் சந்தித்தபோது, அவர்களுக்கு வழங்கிய உரையை இவ்விதம் துவக்கினார்.
இந்தியத் திருச்சபை நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்களில் இளையோரை வழிநடத்தும் பள்ளிகள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இப்பள்ளிகளின் மூலம் நீதியும், வளமையும் நிறைந்த எதிர்காலத்தை இந்தியாவில் உருவாக்க திருச்சபை சிறப்பான முறையில் அழைக்கப்பட்டுள்ளது என்றார்.
திருச்சபையின் கண்காணிப்பில் நடத்தப்படும் பள்ளிகளில் சரியான கத்தோலிக்கப் படிப்பினைகளும் உண்மையான வழிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும், கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருமே கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பெற்றுள்ளனரா என்பதை கண்காணிப்பதும் ஆயர்களின் கடமை என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இவ்வியாழன் காலை ஆயர்கள் அனைவரையும் சந்தித்து உரைவழங்குவதற்கு முன், மைசூர் ஆயர் தாமஸ் அன்டனி வாழப்பில்லியையும், ஷிமோகா ஆயர் ஜெரால்ட் ஐசக் லோபோவையும் திருத்தந்தை தனியே சந்தித்தார்.







All the contents on this site are copyrighted ©.