2011-09-08 15:50:30

இலங்கை ஆணையம்: அம்னெஸ்டி இண்டர்னேஷனல் விமர்சனம்


செப்.08,2011. இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் அடிப்படையில் குறைபாடுள்ளவை என்று அகில உலக மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியையும் வழங்காது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னர் நடந்த விசாரணைகளின் எழுத்து வடிவ ஆவணங்களை ஆராய்ந்த அம்னெஸ்டி இண்டர்னேஷனல், பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் இவ்விசாரணைகளில் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுகிறது
போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டது, பலவந்தமாக ஆட்கள் கடத்தபப்ட்டது போன்ற விடயங்கள் அந்த ஆணையத்தால் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை என்று தமது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறுகிறது.
இலங்கை அரசை அந்த ஆணையம் காப்பாற்றி வருகிறது என்று அம்னெஸ்டி இண்டர்னேஷனல் அமைப்பின் ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குநர் சாம் ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தொடர்பான விடயம் சில நாட்களில் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில், போரின் இறுதிகட்டம் குறித்த ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவை என்கிற அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.
இந்த ஆண்டின் முற்பகுதியில், தமிழ் கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக வெளியான படங்கள் உண்மையானவையே என்று ஐ நா வின் அதிகாரிகள் குழு ஒன்று முடிவு செய்திருந்தது. அந்தக் குழுவிலிருந்த ஒரு ஆய்வாளர் அந்தப் படம் மட்டுமே போர் குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கு சாட்சியாகும் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.