கேரளாவில் அன்னை வேளாங்கண்ணி கோவில் தாக்கப்பட்டுள்ளது
செப்.07,2011. கேரளாவின் கொல்லம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி கோவில் அடையாளம்
தெரியாத 20 பேர் கொண்ட ஒரு குழுவால் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து,
இக்கோவில் அமைந்துள்ள கொட்டன்குலங்கராவுக்கு இத்திங்களன்று சென்ற கொல்லம் ஆயர் Stanley
Roman கிறிஸ்தவர்கள் இப்பிரச்சனையை அமைதியான முறையில் அணுக வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தார். அன்னை வேளாங்கண்ணியின் பெயரால் 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தச்
சிற்றாலயத்திற்கு எவ்வித மத பாகுபாடின்றி வருகை தரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும்
அதிகரித்து வருவதால், இக்கோவிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளன என்றும், இக்கோவிலின்
புகழை விரும்பாத இந்து அடிப்படைவாதக் குழுவினரால் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்
என்றும் ஆயர் Roman கூறினார். இத்தாக்குதல்கள் குறித்து காவல் துறையிடம் அறிவிக்கப்பட்டுள்ளதென்று
கூறிய ஆயர், காவல் துறையும், சட்டமும் இந்த வன்முறைக்குத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார்கள்
என்று தான் நம்புவதாக மேலும் கூறினார். Pune, Secunderabad ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற
தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது கொல்லத்திலும் கத்தோலிக்கக் கோவில் தாக்குதலுக்கு உள்ளாகி
இருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரிய ஓர் ஈனச்செயல் என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள்
அவையின் தலைவர் சஜன் K. ஜார்ஜ் கூறினார்.