2011-09-07 15:03:19

உலகின் பொருளாதார நெருக்கடிகளில் திருநற்கருணை சொல்லித்தரும் பாடம்


செப்.07,2011. உலகம் இன்னும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்குண்டிருக்கும் இவ்வேளையில், நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தாலே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்பதை திருநற்கருணை நமக்குச் சொல்லித் தருகிறதென்று கர்தினால் Giovanni Battista கூறினார்.
இத்தாலியின் அன்கோனா நகரில் கடந்த ஞாயிறன்று ஆரம்பமான திருநற்கருணை மாநாட்டிற்கு திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள கர்தினால் Giovanni Battista இத்திங்கள் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இயேசு அற்புதமாக அப்பத்தைப் பலுகச்செய்த புதுமையைக் குறித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இயேசு பல்லாயிரம் மக்களுக்கு உணவு கொடுத்த இந்தப் புதுமை ஒரு சிறுவன் அளித்த ரொட்டித் துண்டு, மற்றும் மீன் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமானது என்று சுட்டிக் காட்டிய கர்தினால் Giovanni Battista, நமது பங்களிப்பு இல்லையெனில், உலகின் வறுமையும், பசிக் கொடுமையும் தீராது என்று கூறினார்.
இயேசுவைச் சுற்றிக் கூடியிருந்த மக்கள் பசியுடன் இருந்தனர் என்பதை நற்செய்தி கூறும்போது, இன்றைய உலகில் உண்மை, நீதி, சுதந்திரம், அன்பு ஆகிய வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குப் பசியோடு காத்திருக்கும் இவ்வுலக மக்களை நமக்கு நினைவுறுத்துகிறது என்று கர்தினால் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.