2011-09-07 15:07:33

உலக வர்த்தகக் கோபுரங்களின் நினைவுச் சதுக்கத்தில் சிலுவை வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்கு


செப்.07,2011. நியூயார்க் பெருநகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் விமானத் தாக்குதல்களுக்கு உள்ளானதன் பத்தாம் ஆண்டு நிறைவு நெருங்கி வரும் வேளையில், அக்கோபுரங்கள் இருந்த பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சியில், சிலுவை ஒன்று வைக்கப்பட்டிருப்பதற்கு கடவுள் நம்பிக்கையற்ற அமெரிக்கர்களின் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
உலக வர்த்தகக் கோபுரங்கள் இருந்த Ground Zero அதாவது, பூஜ்ய நிலம் என்று பரவலாக அழைக்கப்படும் இவ்விடத்தில் வருகிற ஞாயிறு, செப்டம்பர் 11ம் தேதி நினைவுச் சதுக்கம் ஒன்றும் கண்காட்சியும் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்.
கோபுரங்களின் இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு இரும்பு சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள 17 அடி உயரமுள்ள சிலுவை இச்சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சதுக்கம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஓரிடம் என்றும், இதில் சிலுவையை வைப்பது இதை ஒரு கிறிஸ்தவ இடமாக மாற்றும் முயற்சி என்றும் கடவுள் நம்பிக்கையற்ற அமெரிக்கர்களின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்றபோது, நியூயார்க் மக்களுக்குத் தேவையான நம்பிக்கையையும், சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டிய ஓர் அடையாளமாய் சிலுவை இருந்ததால், இச்சிலுவை இச்சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது பொருத்தமே என்று பாராளுமன்ற பிரதிநிதி Michael Grimm கூறினார்.
இந்தக் கண்காட்சியில் யூதர்களின் மத அடையாளமான விண்மீன் ஒன்றும், கோபுரங்களின் இடிபாடுகளில், உருகிப்போன இரும்புடன் இணைந்து கிடந்த விவிலியம் ஒன்றும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்று Michael Grimm மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.